பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474 அகத்திணைக் கொள்கைகள் அடும்புக்கொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக் குப்பை வெண்மணல் பக்கஞ் சேர்த்தி நிறைச்சூல் யாமை மறைத்தீன்று புதைத்த கோட்டுவட் டுருவின் புலவு நாறு முட்டைப் பார்ப்பிட னாகும் அளவைப் பகுவாய்க் கணவன் ஒம்பும் கானலஞ் சேர்ப்பன்.28"

[அடும்பு-ஒருவகைத் தாவரம்; வாங்கி-இழுத்து; கொடுங்கழி-வளைந்த கானல் கழி; குப்பை-மணல்மேடு, சூல்- கருப்பம்; மறைத்து-மறைய; கோடு-யானைக் கொம்பு; வட்டு-சூதாடு காய்கள்; பார்ப்பு-குஞ்சு, கணவன்-ஆண் யாமை]

இந்த நெய்தல் திணைப் பாடற்பகுதியில் வரும் செய்தி இது: நிறைந்த சூலுடன் உள்ள பெண்யாமை அரும்புக் கொடி சிதையு மாறு இழுத்து வந்து உப்பங்கழியின் அருகிலுள்ள மணல் மேட்டில் சேர்க்கின்றது. யாரும் அறியாமல் தான் ஈனும் முட்டைகளை அம் மணலில் மறைக்கின்றது. அம்முட்டைகள் பக்குவப்பட்டு குஞ்சுகள் வெளிப்படும்வரை ஆண்யாமை அவற்றைப் பாதுகாக்கின்றது. இத்தகைய நாட்டினையுடையவன் நம் தலைவன்.

    மேலாகப் பார்ப்பதற்கு நெய்தல் நில நிகழ்ச்சிபோல் தோன்றும் இதில் குறிப்பிடப்பெறும் வேறொரு கருத்து உண்டு. நிறைச் சூல் பெண்யாமை காமம் நிறைந்த தலைவியாகவும், அடும்புக் கொடி தலைவி அன்னையர்பால் கொண்டுள்ள அன்புத் தளையாகவும், வெண்மணல் தலைவனின் பக்கமாகவும், முட்டை களவொழுக்கமாகவும், முட்டையை மறைத்துப் புதைத்தது கள வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்து வைத்த தன்மையாகவும், முட்டை புலவு நாறுதல் அலர் எழும் தன்மை யாகவும், முட்டை பார்ப்பாகும் அளவு ஆண்யாமை ஒம்புதல் தலைவன் தலைவியை வரைந்து மாட்சிமைப் படுத்தும்வரை அவன் குறிவழியொழுகித் தலைமகளை ஒம்பின தன்மையாகவும் நின்று வேறொரு கருத்தினை உணர்த்துவதனை அறியலாம். தலைவன் தலைவியை களவு முறையில் மணந்து கற்பொழுக்கத் தில் புகும்வரையிலுள்ள பல்வேறு செய்திகளைப் பாங்குறப் புலப்படுத்தும் முறை பன்முறை சிந்தித்து மகிழத் தக்கது.

28. மேற்படி-160