பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476 அகத்திணைக் கொள்கைகள்


கெடுத்ததாகவும், ஆசினிப் பழத்தைப் பயன்படாமல் உதிர்த்த தன்மை அவள் நுகர்கின்ற இன்பத்தைக் கெடுத்ததாகவும், அஃது இறாலில் தேனைப் பயன்படாது உகுத்த தன்மை தலைவி நலம் தலைவற்குப் பயன்படாமல் கெட்டதாகவும், அது மாவின் குலை யைச் சிதறுவித்த தன்மை ஆயவெள்ளம் தலைவியோடு கூடி விளையாடாமல் நீங்கினதாகவும், அது வாழை மடலைக் கிழித்த தன்மை தோழியை வருத்தினதாகவும், அது பழவின் பழத்துள் தங்கின தன்மை அக்கடுஞ்சொல் தலைவி நெஞ்சத்தில் தங்கின தாகவும் கொள்ளல் வேண்டும்.

       களவில் ஒழுகும் தலைவன் சிறைப் புறமாக வந்து நிற்கின்றான். தோழியும் தலைவியும் மூங்கில் நெல்லைக் குற்றிக் கொண்டே வள்ளைப் பாட்டுப் பாடுகின்றனர். தலைவி தலைவனை இயற்பழிப்பதாகவும், தோழி இயற்பட மொழிவ தாகவும் பாட்டு அமைந்துள்ளது.
       (2) அகன்றுறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த
           பகன்றைப்பூ உறநீண்ட பாசடைத் தாமரை 
           கண்பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தால் 
           தண்கமழ் நறுந்தேறல் உண்பவன் முகம்போல 
           வண்பிணி தளைவிடூஉம் வயலணி நல்லூர. 30 "
          (புதல் - சிறு துறு; பகன்றைப்பூ-ஒருவகைப் பூ; பாசடை - 
           பசிய இலை; கண் பொர - கண்ணில் குத்திக் கூசும்படி 
           செய்தல்; வள்ளம் - கிண்ணம்; வண்பிணி - வளவிய 
           முறுக்கு).
          மருதக்கலிப் பாடலின் முற்பகுதி இது. தலைவனது ஊரை வருணிக்கின்றது. இப்பகுதி அவன் ஊரில் ஒடுகின்ற ஆற்றில் பலர் இறங்கி நீர் பருகக் கூடியவாறு துறை அமைந்துள்ளது. இந்த ஆறு பாய்வதால் வயல் வளம் மிக்கதாகப் பொலிகின்றது. நீரோட்டத்தில் அடித்துக் கொண்டு வரப்பெற்ற பகன்றைப் பூ சிறு தூருடன் வந்து தன் அடியில் கிடக்கும் அளவுக்கு பசிய இலையுடன் கூடிய தாமரை வளர்ந்து கிடக்கின்றது. கண் வெறி கொள்ளும்படி ஒளி வீசும் அந்த வயலில் வெள்ளிக் கிண்ணத்தால் நறிய கள்ளை உண்ணும் பெண்ணின் முகம்போல் தாமரை முகையின் முறுக்கு அவிழ்ந்துப் பூத்துக் கிடக்கின்றது. இந்த வருணனை தலைவியின் கூற்றாக அமைந்துள்ளது.

30. மருதக் கலி - 8