பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

473 அகத்திணைக் கொள்கைகள்

------------------------------------------------------------------
     நெய்தல் ஒழுக்கத்தைக் காட்டும் கலிப் பாடலின் முற்பகுதி இது. நெய்தற் கழியின் இயல்பை விளக்குவதாக அமைந் துள்ளது இப் பகுதி: ஒளி பொருந்திய ஞாயிறு மேற்கு மலையில் சேர்கின்றது. உலகமெல்லாம் தன் தண்ணிய ஒளி பரக்கும் தன்மை யதாய், தெளிந்த கடற் பரப்பில் அதன் திரை நீக்கிக்கொண்டு தோன்றும் முழுமதி தன் அழகிய ஒளியை நிரப்புகின்றது. பல வகையான பறவைக் கூட்டங்கள் தத்தம் இரைகளை அருந்திப் பசியாறித் தத்தம் இருப்பிடங்களைச் சேர்கின்றன. இப்போது கழியின் ஆரவாரம் அடங்கித் தோன்றுகின்றது. பகலின் ஒளி மங்கிவிட்டமையால் கழியிலுள்ள வளமான குவிந்த நீல மலர்களும் இதழின் பிரிவு தெரியாமல் மொத்தமாய்க் குண்டுகள் போல் தோன்றுவதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீல மணியே என்று மற்றவர்கள் மருண்டு நோக்குவதற்கு இடந் தருகின்றது. ஆரவாரம் அடங்கி இருளிற் காணப்பெறும் பெரிய கழி உறக்கத்தில்

புகுந்து விட்டது போல் தோன்றுகின்றது."

          இது தோழியின் கூற்றாக அமைந்துள்ளது. காலத்துக்கும்

இடத்திற்கும் ஏற்றபடி இடத்தின் அமைப்புகளை அழகுற இடித் துரைக்கும்போதே தன் உள்ளத்திற் கொண்டுள்ள வேறு கருத்து களையும் குறிப்பாய்ப் புலப்படுத்துகின்றாள். தலைவியின் கள வொழுக்கத்தைப்பற்றி ஊரில் அலர் எழுந்ததால் தலைவன் ஒரு வழித் தணந்தவிடத்துத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறித் தலைவியை வரைந்து கொள்ளுமாறு கூறும் இடம் இது. ஒளி கொடுத்துக் கொண்டிருந்த பகலவன் மேற்கு மலையில் போய் மறைந்தான் என்பதனால், தலைவிக்கு இன்பம் ஊட்டிக் கொண் டிருந்த தலைமகன் இப்போது தன் ஊரில் மறைந்து கொண்டான் என்பதும்; முழுமதியம் விளக்கமாய் எழுந்தது என்பதால், இல்லத்தில் காவல்கள் முழு அளவில் விளக்கமாய் விழித்துக் கொண்டுள்ளன என்பதும்; புள்ளினங்கள் ஆரவாரம் அடங்கித் தத்தம் இருப்பிடங்களை (கூடுகளை) அடைந்தன என்பதனால், அயல் மாதர்களின் பழிச் சொற்கள் அடங்கி அவர்கள் தத்தம் இல்லத்தில் அமைந்து விட்டனர் என்பதும்; நீல மலர்களை நீல மணிகள் என்று மருள்கின்றனர் என்பதனால், தலைவியை இல்லத்திலுறைவோர் மருண்டு மருண்டு நோக்குகின்றனர் என்பதும்; கழி உறக்கத்தில் புகுந்ததுபோல் உள்ளது என்பதனால் , ஊர் அமைதியாய் உள்ளது என்பதும்; குளிர்ந்த சேர்ப்பனே என்பதனால், தலைவன் ஏதும் அறியாதவன்போல் இனிமையா யுள்ளான் என்பதும் தோழி தலைவனுக்கு நிலத்தின் இயற்கை