பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480 - அகத்திணைக் கொள்கைகள்

-----------------------------------------------------------------------------  
      தீண்டும்; சென்னி - கொடுமுடி (சிகரம் கிளைஇய. கிளைத்த, அலரி-        பூக்கள்; தாஅய்-உதிர்ந்து பரவி; வம்பு. கச்சை கவின்-அழகு; 
      குன்றுகெழு-மலை பொருந்திய)
      

தோழியின் புனைந்துரையிற் கூறப்பெறும் கருப்பொருள் நிகழ்ச்சிகளை உவமையாகக்கொண்டு அவள் சொல்லக் கருதிய வேறு பொருள்களை செவிலி உய்த்துணர்தல் வேண்டும். அகப்பொருள் ஒழுகலாற்றில் இங்ஙனம் சொல்லால் வெளியிட்டுக் கூறுவதற்கு உரியவல்லாத எண்ணங்களை நாகரிகமாக மறைத்துக் கூறுதற் பொருட்டு அமைத்துக் கொண்ட உரையாடல் முறையே உள்ளுறை யுவமமாகும் என்பதையும், இந்தக் கருப்பொருள்: நிகழ்ச்சிகளை உவமையாகக் கொண்டு தலைவன் தலைவி என்பவர்களின் ஒழுகலாறுகளைக் கேட்போர் உய்த்துணர்ந்து கொள்ளச் செய்தல் இந்த உள்ளுறையின் நோக்கம் என்பதையும் நாம் அறிவோம்.

     மேற்கூறிய பாடற்பகுதியில் உள்ள கருப்பொருள்நிகழ்ச்சிகளை முதலில் காண்போம். முற்றிப் பழுத்த மிளகுகள் சிந்திக் கிடக்கின்ற பாறையின் பாங்கர் அழகிய சுனையொன்று உள்ளது. அச்சுனையின் கரையில் மாவின் பழங்களும் பலவின் கனிகளும் கனிந்து சாறாய் ஒழுகுகின்றன. அவற்றின் மேல் மலையுச்சியிற் கட்டப் பெற்றுள்ள தேனடை கிழிய அதன் உள்ளே உள்ள தேன் தன்கட் படியும் தேனிக்களையும் தள்ளிக் கொண்டு முற்கூறிய பழச் சாற்றில் பாய்ந்து சுனையிற் கலக்கின்றது. அவ்வாறு பாய்ந்த தேறலை அங்குத் திரியும் மயில் இயல்பான சுனை நீர் என்று கருதிப் பருகுகின்றது. அத்தெளிவைப் பருகியதால் களிப்புற்ற அம்மஞ்ஞை மூங்கிற் கழிகளில் இழுத்துக் கட்டிய கயிற்றின்மீது தாளம் தவற ஆடும் பெண் மகள்போன்று தளர்ந்து ஆடுகின்றது. இத்தகைய சாரல் தலைவனது குன்றின்கண் உள்ளது. இவை பாடற்பகுதியில் கூறப்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் ஆகும்.
     
        இனி, இவ்வுள்ளுறை யுவமத்தில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துகளைக்கொண்டு கவிஞன் உணர்த்த இருக்கும் அடிப்படையான கருத்துகளை விளக்குவோம். நன்கு முற்றின மிளகுகள் சிந்திக் கிடக்கின்ற பாறை வீரம் மிக்க மலைவாணர் வாழும் ஊராகவும், அப்பாறையிலுள்ள பெரிய சுனை தலைவன் தோன்றின சிறப்பு மிக்க குடியாகவும், மாம்பழத்தாலும் பலாப் பழத்தாலும் விளைந்த தேறல் இனிய நீர்மையராகிய தாய்