பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482 அகத்திணைக் கொள்கைகள்

-----------------------------------------------------------------------------

எளியனாக்கியது பால்வரை தெய்வமே என்னும் உண்மையும், இவன் தலைவியை எதிர்ப்பட்டமை அவள் குடிக்கு அழகும் ஆக்கமுமாகும் என்பதாம் ஆகிய எண்ணங்களை த் தோழி செவிலிக்குக் குறிப்பாக அறிவுறுத்தும் முறை பெரிதும் பாராட்டுவதற்குரியது. இங்ஙனம் நாகரிக முறையில் புலப்படுத்தும் முறை தமிழ்ப் பொருளிலக்கணத்தின் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் தலைவனது நாட்டைச் சிறப்பித்துக் கூறினமையாலும் இவ்வளவு உயர்ச்சியையுடைய தலைவன் தன் பெருமையை மறந்து தலைவியுடன் கூடியமை கூறினமையாலும் முறையே அறத்தொடு நிற்கும் திறங்களுள் ஏத்தலும் எளித்தலும் முறையே அமைந்து திகழ்வதையும் உணர்ந்து மகிழலாம்.

 உள்ளுறையின் சிறப்பு : இதுகாறும் சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் சில உள்ளுறையுவமங்களை நுகர்ந்து திளைத்தோம். உள்ளுறை உவமத்தின் மூலம் கவிஞர்கள் ஒரே சமயத்தில் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளுகின்றனர். முதன் முதலாகத் தாம் எடுத்துக் கொண்ட திணையின் முதல், கருப்பொருள்களை வருணிக்கின்றனர். வெளித் தோற்றத்திற்கு அஃது அந்த நில வருணனை அல்லது ஒரு நிகழ்ச்சி கூறப்பெறுவது போல் தோன்றும். ஆயின் ஆழ்ந்து நோக்குழி, அஃது உணர்த்துவது தலைவனின் களவொழுக்கம், தலைவியின் துயரம், தலைவனை வரைவு கடாவுதல், உடன் போக்கு நயத்தல், இவற்றுள் யாதாவதொன்றினைப் புலப்படுத்துவதாக அமையும். தலைவனின் இனிய பண்பினையோ அல்லது கொடிய இயல்பினையோ கூறுவதாகவும் இருக்கலாம். இவற்றையெல்லாம் வெளிப்படையாகத் தோழியோ அன்றித் தலைவியோ சொல்லுவது நாகரிகப் பண்பினுக்கு ஏற்றதன்று; அகப்பொருளில் அங்ஙனம் கூறுவது முறையுமன்று. புறப்பொருளில் கூட பல்வேறு இங்கித முறைகளைக் கையாள வேண்டும் என்பதை அறிந்த நமக்கு அகப்பொருளில் இந்நுட்பம் தேவைப்படும் என்பது புலனாகாமற் போகாது. 
              பொருளிலக்கணத்திற்கு ஏனைய உவமம் உரியதாயினும், இவ்வுள்ளுறை உவமமே மிகவும் சிறந்தது என்பது தொல்காப்பியனாரின் கருத்து. பேராசிரியரும் "மற்றிவையெல்லாம் அகப்பொருட்கே உரியவாக விதந்தோதிய தென்னை, புறப்பொருட்கு வாராதன போலவெனின் ஆண்டு வருதல் அரிதாகலின் இவ்வாறு அகத்திற்கே கூறினான் என்பது" என்று எழுதினார் 34 இதுபற்றியே.

34. உவம 31 இன் உரை காண்க. (பேரா)