பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/505

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இறைச்சிப் பொருள் 487 தன் கற்புக்கு அழிவு நேரும் எனக் கருதித் தான் தலைவனுக்குக் கற்புக் கடன் பூண்டிருக்கும் மறைச் செய்தியைச் செவிலியும் குறிப் பான் உணரும்பொருட்டு அவள் கேட்குமாற்றால் தோழியை நோக்கிக் கூறுகின்றாள். இச் செய்யுளின் வெளிப்படைப் பொருள் இது: "தோழி, அந்த நம்பியின் மலைச் சாரலிலுள்ள மரங்கள் என்ன மரங்களாக இருக்குமோ? யான் அவற்றை இன்னவை யென அறியக் கூட வில்லை. அந் நம்பி அவற்றின் தளிரையும் மலரையும் தானும் சூடிக் கொண்டுள்ளான். நமக்கும் அவை சிறந்த தழையாடை யாகி அழகு தருவதைப் பார்த்தனையா? இம் மலர்களை நோக்குக. பொன்னாற் செய்யப்பெற்றவைபோல் தோன்று கின்றன; இவற்றின் அரும்புகளும் மணிபோல் மின்னுகின்றன. இப்படிப் பொன் மலரும் மணியரும்பும் உடைய மரம் என்ன மரமோ? இவை எனக்குப் பெரிதும் வியப்பூட்டுகின்றன’’ என்பது. தலைவி ஈண்டுச் செவிலிக்கு உணர்த்த வேண்டிய பொருள் இது: அன்னையே, யான் ஒரு நம்பியைக் காதலித்து விட்டேன். ஆதலின் என்னை மணக்கக் கருதிப் பெண் வேண்டிவரும் நொது மலர்க்கு எந்தை மகட்கொடை நேராமல் தடுத்து விடுக. நான் காதலிக்கும் அத்தலைவனுக்கே என்னை மணம் செய்விக்க வேண்டுவனவும் இன்னே செய்வாயாக’ என்பது. இப் பொருள் அவள் கூற வேண்டிய பொருளாகவும் அவள் கூறிய மொழிகளோ வெளிப்படையில் இப் பொருட்குத் தொடர்பில்லாதது போலவும் தோன்றுதல் காண்க. இறைச்சி தானே பொருள் புறத்ததுவே" என்ற தொல்காப்பிய விதிக்கு ஏற்றதாக இருப்பதையும் அறிக. தலைவி கூறிய மொழிகள் அவள் கூறக் கருதிய பொருளை எங்ஙனம் உணர்த்துகின்றன என்பதைக் காண்போம். தலைவி பெரிதும் வியத்தற்குக் காரணமான அந்த மரந்தான் என்ன மரம் என்று அறிந்து கொள்வதற்கு அவள் மொழியைக் கேட்கும் செவிலிக்கு விருப்பம் தோன்றுதல் இயல்பன்றோ? இயல்பாகவே தலைவியின் கூற்று செவிலியின் உள்ளத்தில் ஆராய்ச்சி அறி வினைத் தூண்டி விடுதல் உணரப்படும். ஆராய்ச்சி அறிவு தலைப் பட்டவள் அத்தழை யாடையையும் அதன்கண் அழகுற்றுத் திகழும் மலரையும் அரும்பையும் நோக்கி அதுதானும் வேங்கைத் தழையும் மலரும் அரும்புமே ஆக இருப்பதைக் கண்ணுறுகின்றாள் 5. பொருளியல் - 33 (இளம்)