பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 அகத்திணைக் கொள்கைகள் தொடி - வளையல்; ஒழிய - நீங்கி இருப்ப; ஆள்வினை மருங்கின் - முயற்சியின் பொருட்டு) பொருள் தேடச் செல்ல நினைப்பவன் உள்ளத்தில் துணைவியின் பேரழகும், அவள் தரும் பேரின்பமும் அவன் உள்ளத்தே உருப் பெற்று நிற்கலாயின. வளையணிந்து வனப்பில் மிகுந்து இளமை எழில் தோன்ற நிற்கும் அவள் அழகு அவன் கண்ணிற்கு விருந்தாய் அமைந்தது. அந்த அழகு அவள் தரும் இன்பத்தையும் நினைப் பூட்டிற்று. அவள் வாயில் ஊறும் உமிழ் நீர் தரும் இன்பத்தை எண்ணுகின்றான். பொருள்வயிற் பிரியின் இந்த இன்பத்தை இழக்க நேரிடுமே என்று ஏங்குகின்றான். இளமை கழிந்து துய்க்கும் இன்பம் இன்பம் ஆகாது. இளமையிற் சிறந்த வளமையும் இல்லை; இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலும் இன்று. இவ்வாறு எண்ணுகின்றவன் இளமையின் சிறுமையையும் அதன் அருமையையும் சிந்திக்கின்றான். ஒருவனது வாழ்நாள் கழிந்த பின்னர் ஒரு நாழிகையும் வாழ விடான் கூற்றுவன். பொருள் கருதிப் பிரிந்து செல்பவர் உயிரோடு மீள்வர் என்பதற்கு உறுதி இல்லை; நிலையற்றது இவ்வாழ்வு' ஆகவே கிடைத்தற்கரிய, கழிந்தால் மீண்டும் பெறலாகாத, இளமைக் காலத்திலேயே நுகர வேண்டிய இன்பங்களை நுகர்தல் வேண்டும் என்றே அறிவுடையோர் அனைவரும் எண்ணுவர். உலகமே ஒன்று திரண்டு வந்தா லொத்த பெரும் பொருளே பெறு வதாயினும், அப்பொருள் கருதி அவ்விளமை இன்பம் அழியப் பிரிய எண்ணார். இவ்வாறு அவன் உள்ளம் பலவற்றை எண்ணி எண்ணி எதையும் துணிய மாட்டாது இரங்குகின்றது. தன்னால் காதலிக்கப்பெற்றாள் ஒருத்தியின் வாலெயிறு ஊறிய நீர் தரும் இன்பம் பாலும் தேனும் கலந்த கலவை நீர் தரும் இன்பத்தை யொக்கும் என்று காதலன் பாராட்டுவன். ஆனால் நாம் கூறும் தலைவன் தன் துணைவியின் வாலெயிறு ஊறும் நீரின் சுவைக்கு நிகரான சுவையுடைப் பொருளாகக் கரும்பினைக் கூறுகின்றான். இனிய சுவையுள்ள பொருள்களுள் தலையாயது கரும்பு. மிக மிக இனியாரை உருவகமாக என் கரும்பே, என் கட்டிக் கரும்பே' என்று வழங்குவது உண்டன்றோ? நச்சினார்க் கினியர் கணவருக்கு மெய் முழுவதும் இனிதாயிருத்தலின் 7. குறள் - 1121