இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிறப்பு. 17
உண்ணார்; பகுத்தே உண்பர்; அல்லல்கட்கு அஞ்சார்; சோம்பி யிரார்; மறதியுறார்; கவலை கொள்ளார்; புகழையே பேணுவார்; பழிக்கு நாணுவார்; பண்பமைந் தொழுகுவார்; என்னும் இப்பெற்றியோரே பெரியோர் என இது விளக்கி நிற்றல்காண்க. இளம்பெருவழுதி என்னும் பெரும்புலமையாளர் உளங்கனிந் துரைத்த இவ்வளங்கெழு பாடலின் நலம்பெறுபொருளை உளம்பொதிந்துணர்க. உணரின், உணருந்தோறும் உவகைமீக்கூர்ந்து உள்ளம் உயர்ந்து திகழ்தலை உணரலாகும். ஒருவன் இங்கு மனிதனாகப்பிறந்தால் இவ் இனியகுணங்களை யடைந்து அவன் புனிதனாகவேண்டும். அவன் பிறப்பு இவ்வுலகிற்கு ஓர் பெருஞ்சிறப்பாகும். அவ்வாழ்வே உலகியலுக்கு ஓர் இனிய எல்லையாகி உயரிய நிலையாய் என்றும் நிலவி நிற்கும். அங்ஙனம் வாழ்பவன் பிறப்பால் மனிதனாயினும் சிறப்பால் தேவனாக மதிக்கப் படுவான். கருவிலேயே தெய்வத்திரு வுடையராய்த் தோன்றி விளங்கும் மெய்யறிவாளரைப் பெற்றபோதுதான் இந்நிலமகள் பெருமகிழ்ச்சி யடைகின்றாள்.
இங்ஙனம் சிறப்புறு பிறப்போடு திகழ்ந்துநின்ற நமது அருட்பெருந் தகையார் இமயத்திற்குத் தென்பாலுள்ள தமனியம் என்னும் அழகிய மலைச்சாரலில் முதலில் இனிதமர்ந்திருந்தார். தவவொழுக்கங்கள் நிரம்பிய முனிவர் பலர் இப்புனிதமூர்த்தியைப் புடைசூழ்ந்து வாழ்ந்தார். சாம்பூநதம் என்னும் உயர்ந்த பொன்னால் அமைந்த சிறந்த தெய்வப் பதுமைபோல் அவரிடை இவர் திகழ்ந்திருந்தார்.
'நடந்தாலும் இருந்தாலும் நவின்றாலும் துயில்கொண்டு கிடந்தாலும் விழித்தாலும் கிளர்முடி மன்னவர் முதலோர்'
3