உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகத்திய முனிவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

அகத்திய முனிவர்.

பொற் கோயிலிலே அழகிய மணி மண்டபத்திலே விழுமிய நலங்கள் பல விளங்கி நின்றன. திருமாலாதியர் உவகைமீக் கூர்ந்து மருங்குசூழப் பெருமான் எழுந்தருள நின்றார். அது பொழுது வேதங்கள் முழங்கின. கீதங்கள் கிளர்ந்தன. படகை சல்லரி குடமுழா முதலிய நாதங்கள் வளர்ந்தன. சித்தர் கந்தருவர் முதலிய தேவகணங்கள் யாவரும் மகிழ்ந்து திரண்டு மனமுருகித் துதித்து மலர்மாரி பொழிந்தனர். பல கடல்கள் ஒருங் கெழுந்து முழங்கி வந்தனபோல் திசைக ளெங்கும் இசைகள் எழுந்தன.

'அருமைநாயகன் வருகின்றான்; அடிமுடி அரியயன் அறியாத பெருமைநாயகன் வருகின்றான்; உலகெலாம் பெற்றருள்பெரு மாட்டி, திருமணஞ்செய வருகின்றான்; நுதல்விழித்தெய்வங்கள் மணவாளன், வருகின்றான்; வளநிறைவொடு குறைவிலா வாழ்வினான் வருகின்றான்;

அமரர்நாயகன் வருகின்றான்; ஆலமுண் டமரர் தேவியர்க்கெ ல்லாம், தமதுமங்கலம் தத்தமக்கருளிய தனிமுதல் வருகின்றான்; நிமல நிட்கள நிராமயன் வருகின்றான்; நினைப்பவர் மல மாயைத், திமிரபாற்கரன் வருகின்றான்; எனப்பல சின்னங்கள் பணிமாற.” ( திருக்குற்றால ப்புராணம் )

இன்ன வகையாக முன்னும் பின்னும் பன்னரிய படி எங்கும் இன்னொலிகள் எழும்பின. அவ்வமயம் கண்ணொளி பரப்பிக் காணமுடியாதவாறு எண்ணரிய உயிர்த் தொகைகள் நண்ணி நின்றமையால் இமயம் சாய்ந்தது; அதனால் வடதிசை தாழ்ந்தது. உலகம் நிலை குலைந்தது; உயிர்கள் அஞ்சி உள்ளங்கலங்கின; தேவர்களும் தியங்கினார்; மாதவர்களும் மயங்கினார்; நரகரும் நடுங்கினார்; யாவரும் ஒடுங்கி