பக்கம்:அகத்திய முனிவர்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திய முனிவர் பேறுற்ற நின்னால் முடிவாகும்; பெயருகென்று கூறுற்றிடலும் முனி யீது குறித்துரைப்பான். (2)

    அகத்தியர் இசைத்தது.

வான்செய்தமேனி நெடுமால், மகவேள்வி மன்னன், தேன்செய்தகஞ்சத்து அயன்நிற்க; இச்செய்கைதீயேன் தான்செய்திடவே பணித்திட்டன; தன்மை யீதேல் நான்செய்ததுவே தவம்போலும் நலத்த தெந்தாய்,

                      (கந்தபுராணம்)

இதனால் இவரது அருமை பெருமைகள் இனிது அறியலாகும். எல்லாம் வல்ல இறைவன் இவரை நோக்கிப் “பிறரெவரும் உனக்கு நிகரில்லை” என்று சொல்லியுள்ளார் என்றால் இவருடைய தெய்வப்பெற்றியை எங்ஙனம் அளவிட்டுரைப்பது? இவரது தவமகிமையை உலகம் அறிந்துய்யும் வண்ணம் அவ் அண்ணல் செய்த சூழ்ச்சியாதலால் சொல் வியபடியே இவர் செல்லத் துணிந்தார். அவ் வள்ளலைத் தம் உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டு தென்திசை நோக்கி வருங்கால் வழியிடையே அரியபல அற்புதங்கள் நிகழ்ந்தன. முடிவில் பொதியமலையை யடைந்து உறுதிபெற வடதிசை நோக்கி நின்றார். தாழ்ந்து குலைந்திருந்த உலகம் உடனே சமமாய் நின்றது. வருந்திநின்ற உயிர்கள் யாவும் மகிழ்ந்து திகழ்ந்தன. அமரர்முத லனைவரும் இவரது பெருமையை வியந்தார்; பெரிதும் புகழ்ந்தார்; உரிமை மீக்கூர்ந்தார்; உவந்து போற்றினார். தவலருஞ் சிறப்போடு தென்திசை யடைந்து எல்லா உயிர்களும் இன்புற இங்கு இவர் இனிது தங்கி யிருந்தமையால் தென்முனி எனப் பெற்றார். அதன்பின் அங்குப் பரமன் திருமணம் அழகுற நன்கு முடிந்தது.