பக்கம்:அகத்திய முனிவர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை.


இந்நூல், மலர்தலை உலகினுக்கு உயிரென நின்று அலகில் பல்புகழ் நிலவ நிலவிய அகத்திய முனிவரது பிறப்பு, இருப்பு, குணம், செயல் முதலிய சிறப்பு நலங்களைத் தெளிவுற வுணர்த்தும் இயல்பினை யுடையது. இஃது உருவில் சிறியதாயினும் பொருளில் பெரியது. இகத்தில் நின்றாரும் பரத்தி லுள்ளாரும் அகத்துள் வைத்துப் போற்றும் மகத்துவ மிகுத்த ஓர் மாதவமணியை மருவியுள்ளமையால் ஆதவன்போல் அருளொளி பரப்பும் மேதக வமைந்தது. பண்டைக்காலத்திருந்த நமது முன்னோர்களுடைய சரிதங்களையும் குணநலங்களையும் ஆராய்ந்தறிதல் நமக்கு இனிமை யாயதோர் தனி உரிமையாகும். நமது வாழ்க்கைகளைத் தூய்மைசெய்து உயர் நிலையில் நிறுத்தி உறுதி பெறுதற்கு உயர்ந்தாரது சரித வுணர்ச்சி மிகவும் உதவியாயுள்ளது.

நினைப்பின் வண்ணமே மக்களாகிய நாம் நிலைத்து வருகின்றோம். மேலோர்களுடைய பழக்க வழக்கங்களையும், பான்மை மேன்மைகளையும் நாளும் பயின்று வருவோமாயின் அத்தன்மை நமக்கு மிகுந்த நன்மையாகும். நல்லோர் இயல்புகளைச் சிந்தித்தால் சிந்தை சிறந்து விளங்கும்; அதனால் எல்லா நலங்களும் எளிதில் சித்திக்கும். உள்ளத் தளவே மக்கள் உயர்ந்திருக்கின்றார். ஒருவன் உள்ளம் சிறந்ததானால் அவன் எல்லாரினும் உயர்ந்தவனாகின்றான். அவன் எண்ணிய யாவும் எளிதில் எய்துகின்றான். “உள்ளியது எய்தல் எளிது” என்பது வள்ளுவப் பெருந்தகை