பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
                பிறப்பு.

வனது வரவினே யறிவதிலும் வந்து நின்று இங்கு அவன் புரிந்துள்ள உயர்வினை யறிதலே பெரிதும் நலமாம். அவர் மரபு பரமனுறவோடு கலந்த ஓர் தனி மரபாகும். சிறுமை காணாது அவர் பெருமைகண்டு, அவர் செயல்வழி ஒழுகலே மக்கட்குச் சிறந்த நன்மையாம். நறுமணங்கமழ்ந்து சீதள மிகுந்து இனிதாத் தெளிந்திருக்கும் தண்ணீரைக்கண்ட பொழுது அதனை வாரிக்குடித்துத் தாகம் தணியாமல் மாறி நின்று இந்த நீர்ஊற்று எங்கிருந்து வருகிறது? எவ்வளவு தூரமுள்ளது? எவ்வளவு நிலையினது? இதன் முடிவிடம் யாது? இதனைச் செய்தவர் யாவர்? என இன்னவாறு பலபடியாக எண்ணி யாராய்தல் என்னபயனாம்.

  முன்னர் ஒருமுறை தன்னைப் பசுமகன் என்று இகழ்ந்த அந்தணரைப்பார்த்து ஆபுத்திரன் சிந்தைநொந்து, செய் தவ முடையார் சிறப்பினை நோக்கிப் போற்றாமல் பிறப்பினை நோக்கிப் பிழைபடுதல் பேதைமையே யாமென இரங்கி உரைத்தான். அன்று அவன் கூறியபடியை அடியில் காண்க.
  'ஆன்மகன் அசலன்; மான் மகன் சிருங்கி;
   புலிமகன் விரிஞ்சி, புரையோர் போற்றும்
   நரிமகன் அல்லனோ? கேச கம்பளன்;
   ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்
   றோங்குயர் பெருஞ் சிறப் புரைத்தலு முண்டால்
   ஆவொடு வந்த அழிகுல முண்டோ?
   நான்மறை மாக்காள்! நன்னூ லகத்து’ (மணிமேகலை)

இதில் அவன் குறித்திருக்கும் பெரியார்களுடைய பிறப்பு நிலைகளையும், குறிப்புகளையும் கூர்ந்து நோக்குக.