பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2]

களிற்றியானைநிரை


2. குறிஞ்சி


[பகற் குறிக்கட் செறிப்பறிவுறீஇத் தோழி வரைவு கடாயது.]


கோழிலை வாழைக் 1கோண்மிகு பெருங்குலை
   ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
   சாரற் பலவின் சுளையொ டூழ்படு
   பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்

௫ அறியா துண்ட கடுவன் அயலது
   கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது
   நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்
   குறியா இன்பம் எளிதின் நின்மலைப்
   பல்வேறு விலங்கும் எய்தும் நாட

௧௦ குறித்த இன்பம் நினக்கெவன் அரிய
    வெறுத்த வேஎர் 2வேய்புரை பணைத்தோள்
    நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்
    டிவளும் இணைய ளாயின் தந்தை
    அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்

௧௫ கங்குல் வருதலும் உரியை பைம்புதல்
    வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன
    நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே.

                                            -கபிலர்

(சொ - ள்.) ௧ - ௯. கோழ் இலை வாழைக் கோள் மிகு பெருங்குலை ஊழ்உறு தீங்கனி - வளவிய இலைகளையுடைய வாழையின் காய்த்தல் மிக்க பெரிய குலையிலுள்ள முதிர்ச்சியுற்ற இனிய கனியாலும், உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் ஊழ்படு சுளையொடு - தம்மை உண்போரைப் பிறவற்றை யுண்ணாமல் தடுத்த பக்க மலையிலுள்ள பலாவின் முற்றிய சுளையாலும், பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் - பாறையிடத்து நெடிய சுனையில் உண்டாகிய தேனை, அறியாது உண்ட கடுவன் - தேனென்றறியாதே உண்ட ஆண் குரங்கு, அயலது - அச்சுனையின் பக்கத்ததாகிய, கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது - மிளகு கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏறமாட்டாது, நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம் - நறிய பூக்களாலாய படுக்கையிற் களிப்புற்று உறங்கும் எதிர்பாராத இன்பத்தை, நின்மலைப் பல்வேறு விலங்கும் - நினது மலையிலுள்ள பலவகை விலங்குகளும், எளிதின் எய்தும் நாட - எளிதாக அடையும் நாடனே,

௧௦. குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய - நீ குறித்து முயலும் இன்பங்கள் நினக்கு எங்ஙனம் அரியனவாகும்?

௧௧ - ௫. வெறுத்த ஏஎர் - மிக்க அழகினையுடைய, வேய்புரை பணைத்தோள் இவளும் - மூங்கிலை யொத்த பருத்த தோளினையுடைய



(பாடம்) 1. கோண் முதிர். 2. வேய் மருள்.