பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௪௪

அகநானூறு

[பாட்டு


விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் - (தன்னைக்) காணும் விருப்புடன் தளர்ந்து தளர்ந்து ஓடிவந்த, பூங்கண் புதல்வனை நோக்கி - பூப்போலும் கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டு,

கஉ-அ. வலவ நெடுந்தேர் தாங்குமதி என்று - வலவனே நீண்ட தேரினை நிறுத்துவாயாக என்று கூறி, இழிந்தனன் - தேரினின்றும் இறங்கி, தாங்காது - தாழ்க்காது, மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப் புல்லி - (புதல்வனது) பவள மணியினை யொத்த சிவந்தவாய் தனது மார்பகத்தே பொருந்த எடுத்துத் தழுவி, பெரும செல் இனி அகத்தெனக் கொடுப்போற்கு-பெரும! இனி அகத்திற்குச் செல்வாயாக என விடுப்போனுக்கு, ஒல்லான் கலுழ்தலின்-இசையானாகி அழுதலின், தடுத்த மகனொடு மாநிதிக் கிழவனும் போன்மெனப் புகுதந்தோனே - அங்ஙனம் தடுத்த மகனோடு இவன் குபேரனும் ஆவான் எனக் கூறி இல்லிற் புகுந்தனன் ;

கஅ-உக. யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி - யான் அதனைச் செய்வித்தேன் ஆதற்கு நாணி, இக் கொடியோன் - இக் கொடிய மகன், இடித்து இவற் கலக்கினன் போலும் என - இவனை இடித்துக் கலக்கமுறுவித்தனன் போலும் என்று கூறி, அடிக்குங் கோலொடு சென்று குறுக - அடித்தற்குரிய கோலுடன் சென்று அடைய, தலைக்கொண்டு - மகனைத் தன்பாலணைத்துக்கொண்டு,

உஉ-௬, அவர் மனை -வதுவை நிகழும் அவர் மனையில், இமிழ் கண் முழவின் இன் சீர் - ஒலிக்கும் கண்ணினை யுடைய முழவின் இனிய ஓசை, பயிர்வனபோல வந்து இசைப்பவும் - தன்னை அழைப்பன போல வந்தொலிக்கவும், தவிரான் - தவிராது, கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய - முன்பொருநாள் கழங்கு ஆடும் ஆயத்தாரிடை வந்து நம்மை அருள் செய்த, பழங் கண்ணோட்டமும் நலிய - பழைய அருட் செயலும் வருத்த, அயர்ந்த தன் மணன் - தொடங்கிய தனது மணத்தினை, அழுங்கினன் அல்லனோ - நிறுத்திவிட்டானல்லனோ.

(முடிபு) தோழி, மார்பன் ஒருத்தியொடு வதுவை வேண்டி இத் தெரு இறப்போன், கடைகழிந்து ஓடும் புதல்வனை நோக்கி, தேர் இழிந்தனன் புல்லிக் கொடுப்போற்கு, ஒல்லான் கலுழ்தலின் மகனொடு புகுதந்தோன், யான் நாணிக் கோலொடு குறுக, தலைக்கொண்டு, அவர்மனை விழவின் இன்சீர் இசைப்பவும் கண்ணோட்டமும் நலிய மணன் அழுங்கினன் அல்லனோ; ஆதலால், பழமொழி வாயே யாதல் வாய்த்தனம்.

- சிறுவர்ப் பயந்த செம்மலோர் மறுவின் றெய்துப எனப் பல்லோர் கூறிய பழமொழி என்க.

(வி - ரை.) இம்மை யுலகம் - இவ்வுடம்புடன் வினைப்பயன் நுகரும் உலகம். மறுமை யுலகம் - உயிர் இவ்வுடம்பின் நீங்கிச் சென்று வினைப்பயன் நுகரும் உலகம். மறுவின் றெய்துப என்பதனால் அது நல்லுலகம் என்பது பெற்றாம். இன்று - இன்றி; வினையெச்சக் குறிப்பு முற்று. செறுநரும் விழையும் என்னுங் கருத்து யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்' என (16) முன்னர்ப் போந்ததுங் காண்க.