௧௮அகநானூறு[பாட்டு
(முடிபு) ஒண்ணுதல் அளி நிலை பொறாது அமரிய முகத்தளாய், செல்லா நினைவுடன், கானம் இறப்ப எண்ணுதிராயின், கிளவி அன்னவாக என்னுநள் போல, முகத்திற் காட்டி, ஒன்று நினைந்தேற்றி, புதல்வன் புன்றலைப் பிணையல் மோயினள் உயிர்த்த காலை, அணி யழி தோற்றம் கண்டு நாம் பிரிதும் எனின் பிழையலள் என்று செலவு கடிந்தனம்.
(முடிபு)முகத்தள் கேளாள் வந்து முறுவலள் உணரா அளவை செல்லா நினைவுடன் எனவும், காட்டு நெல்லி பாறை படூஉம் கவான் கூர்ங்கல் சிதைக்கும் அதர கானம் எனவும் கூட்டுக.
(வி-ரை.) அளிநிலை பொறாமையை, 1“முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரைக், கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மனையாரென், னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவர், உள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்” என்பது முதலியவற்றால் அறிக. 2“பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு” என்புழிப் பரிமேலழகரும் பிரிவச்சத்திற்கு இக் கலியின் பகுதியை எடுத்துக் காட்டினர். கொளா - கொண்டு; இதனைக் கொள்ளவெனத் திரிக்க; கொள்ளவென்றே பாடங் கோடலுமாம். வறிது - சிறிது; உரிச்சொல். வாய்மை யற்ற நகையாவது உள்ளத்தொடு பொருந்தாத நகை. முதையலங்காடு என்பதில் அம்மும், பளிங்கத்தன்ன என்பதில் அத்தும் சாரியைகள். அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி என்பதற்கு, காதலுடையாரைப் பிரிதல் அறநெறி யன்றாகலின், நின்னைப் பிரியேன் என்று, இயற்கைப் புணர்ச்சிக் காலத்து நீவிர் கூறிய சொல் என விரித்துரைத்துக் கொள்க. ஏற்றி - ஏற்றம் என்னும் உரியடியாகப் பிறந்த வினையெச்சம்; 3'கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி' என்பது காண்க; எற்றி எனப் பாடங் கொள்வாரும் உளர். மோயினள் வினையெச்ச முற்று; 4'வினையெஞ்சு கிளவியும் வேறு பல் குறிய' என்னும் சூத்திர உரையில், சேனாவரையர் மோயினள் என்பதற்கு வினையெச்சம் முற்றுச் சொல்லது திரிபாய் வந்ததென்றும், நச்சினார்க்கினியர் வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலை முற்று என்றும் இலக்கணம் கூறினர். மணி - ஈண்டுப் பவளம். கழிந்தனம் செலவு என்றது பண்டொருகால் போக்கு ஒழிந்ததனைக் குறித்தது. இது, 5'செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்னும் விதியால் வற்புறுத்திப் பிரிதற்குத் தலைவன் செலவழுங்கியதாம் என்க.
(மே-ள்.) 6'கரணத்தினமைந்து' என்னும் சூத்திர வுரையில் 'கைவிடின் அச்சமும்' என்பதற்கு இளம்பூரணர் இச் செய்யுளை எடுத்துக் காட்டினர். 7'செலவிடை யழுங்கல் என்னும் சூத்திர வுரையில், 'மணியுரு. . . பிரிது நாமெனினே' என்னும் பகுதியைப் பேராசிரியர் எடுத்துக்காட்டி இது வன்புறை குறித்துச் செலவழுங்குதலிற் பாலையாயிற்று என்றார்.
1. கலி. பாலை. ௩. 2. குறள். ௧௧௫௨. 3. குறு. ௧௪௫. 4. தொல். எச். ௬௧. 5. தொல். கற்பு. ௪௪. 6. தொல். கற்பு. ௫. 7. தொல். கற்பு. ௪௪.