பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௩௦(230)

அகநானூறு

[பாட்டு


அறனில் வேந்தன் ஆளும்
கரு) வறனுறு குன்றம் பலவிலங் கினவே.

- கடுந்தொடைக் காவினார்.

(சொ - ள்.) க-௩. பல் இதழ் மெல் மலர் உண் கண் - பல இதழ் களையுடைய மெல்லிய மலர் போன்ற மையுண்ட கண்ணினையும், நல்யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி - நல்ல யாழின் நரம்பு ஒலிப்பது போன்ற மிக இனிய மொழியினையும் உடைய, நலம் நல்கு ஒருத்தி - நலனெல்லாம் தரவல்ல ஒப்பற்ற நம் காதலி, இருந்த ஊர் - இருக்கும் ஊரானது,

௪- க0. கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி - தம் கொம்பினால் பகையாயவற்றைக் குத்தி உழும் களிற்றியானைகளின் கூட்டம் கூட, காடு கால் யாத்த நீடு மரச்சோலை - காடாகப் பரந்த நீண்ட மரங்களை யுடைய சோலையிலுள்ள, விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை - ஒன்றையொன்று விழைந்த அணில்கள் கூடி ஆடும் மூங்கில் வளர்ந்த அகன்றவிடத்தே, வெள் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் - நிணம் தோய்தலால் வெள்ளிய முனையினையுடைய அம்பின் வேகம் பட இறந்தோர்களின், எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை - எண்ணின் எல்லை அறியலாகாத தழையிட்டு மூடிய பதுக்கைகளையுடைய, சுரம் கெழு கவலை கோள் பால் பட்டென - சுரத்திற் பொருந்திய கவர் நெறிகள் ஆறலைக்கும் பகுதியிற் கொள்ளப்பெற்றதாக, வழங்குநர் மடிந்த அத்தம் - வழிப் போவார் இல்லை யாகிய அச் சுரநெறியில்,

க0-ரு. இறந்தோர் கைப் பொருள் இல்லை யாயினும் - அறியாது வந்தோர் கையிற் பொருள் இல்லையாயினும், மெய் கொண்டு இன் உயிர் செகார் விட்டு அகல் தப்பற்கு - அவர்தம் மெய்யைப் பற்றிக்கொண்டு அவர் இனிய உயிரினைக் கொல்லாராய் விட்டு அகன்று வந்த பிழைக்காக, பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் - பெரிய களிற்றின் கொம்பொடு புலியின் வரி பொருந்திய தோலைத் தண்டமாகத் தன் ஏவலரை இறுக்கச் செய்யும், அறன் இல் வேந்தன் ஆளும் வறன் உறு குன்றம் பல விலங்கின - அறனில்லாத அரசன் ஆளும் வறட்சியுற்ற குன்றுகள் பல குறுக்கிட்டுள்ளனவே ; (என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்.)

(முடிபு) நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊர், அறனில் வேந்தன் ஆளும் குன்றம் பல விலங்கின.

சோலையை யுடைய அகன்ற இடத்தில் வீழ்ந்தோரது பதுக்கைகள் பொருந்திய சுரங் கெழு கவலை கோட்பாற் பட்டென வழங்குநர் மடிந்த அத்தம் என்றும், அத்தம் இறந்தோர் உயிர் செகாஅர் விட்டகல் தப்பற்கு மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறனில் வேந்தன் என்றும் கூட்டுக.

(வி - ரை.) ஈண்டி - ஈண்ட எனத் திரிக்க. கால் யாத்தல் - பரத்தல். கோட்பால் - தீங்கின் பகுதி; என்றது ஆறலைக்கும் பகுதி. இறுக்கும் - ஏவலரை இறுக்கச் செய்யும் என விரித்துரைக்க.