பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114]

களிற்றியானை நிரை

௨௪௧(241)


தமிழ்நாட்டின் வடக்கண் இருந்த ஒரு காட்டுத் தலைவன் ஆவன் என்க. காதலர் சேயரென்றலின் எனக் கூட்டுக. உயிர் உடம்பை விட்டுப் போதற்குப் புள் குடம்பையை விட்டுச்செல்லுதல் உவமமாதலை, 1'சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல, யாக்கை தமர்க் கொழிய நீத்து' என்பதனாலறிக. எவ்வம் நீங்க, அழாம் உறைதலும் உரியம் என்றது, உயிர் சென்ற காலத்து நிலையைக் கருதியது.



114. முல்லை

(வினைமுற்றி மீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.)


கேளாய் எல்ல தோழி வேலன்
வெறியயர் களத்துச் சிறுபல தாஅய
விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்
உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு
ரு) அரவுநுங்கு மதியின் ஐயென மறையும்

சிறுபுன் மாலையும் உள்ளார் அவரென
நப்புலந் துறையும் எவ்வம் நீங்க
நூலறி வலவ கடவுமதி உவக்காண்
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை
க௦) யாமங் கொள்பவர் நாட்டிய நளிசுடர்

வானக மீனின் விளங்கித் தோன்றும்
அருங்கடிக் காப்பின் அஞ்சுவரு மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசில் கற்பின்
அரிமதர் மழைக்கண் அமைபுரை பணைத்தோள்
கரு) அணங்குசால் அரிவையைக் காண்குவம்

பொலம்படைக் கலிமாப் பூண்ட தேரே.

-(ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்)


(சொ - ள்.) அ. நூல் அறி வலவ - பரி நூல் வல்ல பாகனே !

க-எ. எல்ல தோழி கேளாய் - எல்லா ஏடி தோழியே யான் கூறுவதனைக் கேட்பாயாக; வேலன் வெறி அயர் களத்து தாய - வேலன் வெறியாடும் களத்தில் பரந்த, சிறு பல விரவு வீ - சிறிய பலவாய கலந்த பூக்கள் போல, உறைத்த ஈர் நறும் புறவின் - பூக்கள் உதிர்ந்த குளிர்ந்த நறிய முல்லை நிலத்தே, உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு - வலிய கதிரின் வெம்மை குறைந்த மேற்கு மலையைச் சேர்ந்த ஞாயிறு, அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் - பாம்பு விழுங்கும் திங்களென மெல்லென மறைகின்ற, சிறு புல் மாலையும் உள்ளார் அவர் என - சிறிய புல்லிய மாலைக்காலத்தும் நம்தலைவர் நம்மை நினைந்திலரே என்றிவ்வாறு நம் தலைவி தன் தோழியை


1. நாலடி. ௩௦.