பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௩௪அகநானூறு[பாட்டு

 

லில்லாத நட்பினால், இருதலைப் புள்ளின் ஓர் உயிரம் = இருதலைப் பறவையைப் போல இரண்டு உடற்கு ஓருயிரினம் ஆவேம்;

௬-௧௪. ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும் = தினைப் புனம் காக்கும் மகளிர் ஓயாது ஆர்க்குந்தோறும், கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை = கிளிகள், தம் இனத்தை அழைக்கும் அணில் ஆடும் பெரிய கிளைகளில், விழுக்கோள் பலவின் பழுப்பயன் கொண்மார் = பெரிய காய்களைக் கொண்ட பலா மரத்தின் பழமாய பயனைக் கொள்ளுதற்கு, குறவர் ஊன்றிய குரம்பை புதைய = குறவர்கள் நாட்டிய குடிசை மறைய, வேங்கை தாய தேம்பாய் தோற்றம் = தேன் ஒழுகும் வேங்கைப் பூக்கள் பரந்த தோற்றத்தை, புலி செத்து வெரீஇய புகர்முக வேழம் = புலியென்று கருதி அஞ்சிய புள்ளிகள் பொருந்திய முகத்தினையுடைய யானை, மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும் = மேகம் பொருந்திய பக்கமலையிலுள்ள மூங்கில்கள் முறிபடப் பெயர்ந்து செல்லும், நல்வரை நாட = நல்ல மலை பொருந்திய நாடனே, நீ வரின் = நீ இரவுக்குறிவரின், மெல்லியல் வாழலள் = மென்மைத்தன்மை வாய்ந்த இத் தலைவி உயிர் வாழ்ந்திராள்.

(முடிபு) வரை நாட! யாய் காதலன்; எந்தை எவள் இயங்குதி என்னும்; யாம் ஓருயிரம்; நீ வரின் மெல்லியல் வாழலள்.

கிளி விளிபயிற்றும் நல்வரை எனவும், வேழம் பெயரும் நல்வரை எனவும் கூட்டுக.

(வி - ரை.) தோழியானவள், யாய் காதலள், எந்தை எவன் இயங்குதி யென்னும் என்பவற்றால் இற்செறிப்பினையும், யாம் ஓருயிரம் என்பதனால் தலைவி யெய்தும் வருத்தத்தினைத் தான் நன்கு அறியுமாற்றினையும், நீ வரின் மெல்லியள் வாழலள் என்பதனால் இரவுக்குறியின் ஏதம் அஞ்சுதலையும் அறிவுறுத்து வரைவு கடாயினளாம் என்க. இல - ஏடி: விளிப்பெயர். கிளி விளி பயிற்றும் என்றது, கிளியோப்பும் மகளிர் குரலைக் கிளியின் குரலெனக் கருதிப் புனத்திலுள்ள கிளிகள் தம் இனத்தை அழைத்தலைச் செய்யும் என்றபடியாம்; 1'கொடிச்சி யின்குரல் கிளிசெத் துடுக்கத்துப், பைங்குர லேனற் படர்தருங் கிளி' எனக் கபிலர் கூறுமாறுங் காண்க. இனி, காவலர் குறவர் எனக் கொண்டு அவர்கள் மரத்தின் சினை மீதிருந்து ஆர்க்குந்தோறும் கிளிகள் ஒலித்தலைச் செய்யும் என்று உரைத்தலுமாம். வெளில் - அணில். கோள் - காய்: காய்த்தலுமாம், பழுப்பயன் - பழுத்த பழமுமாம். குரம்பையில் வேங்கை மலர் பரந்த தோற்றத்தைப் புலியெனக் கருதி வேழம் அஞ்சிற்று என்னும் இக்கருத்து, 2"நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாக நண்ணி, மறமனை வேங்கை யெனநனி யஞ்சுமஞ் சார்சிலம்பா" எனத் திருச்சிற்றம்பலக் கோவையாரின் வருதல் அறியற்பாலது. தேம் - தேன். ஓரும், தான் என்பன அசைகள்.


1. ஐங்குறு. ௨௮௯. 2. திருச்சிற். ௯௬.