பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
114
அகநானூறு - மணிமிடை பவளம்
 

அறநெறிகளிலேயிருந்தும் நீங்காமல் ஒழுகுதல் வேண்டும்; சிறந்தவர்களான உறவுமுறையார்களது துன்பங்கள் பல வற்றையும் தாங்குதலும் வேண்டும்; இவையிரண்டையும் முறையே இயற்றுதல் வேண்டுமென்ற நினைவினாலே வருத்த மடையும் உள்ளத்தோடே இல்லத்திலே எந்நாளும் தங்கியிருந்தவர்களுக்கு, ஒருபோதுமே இன்பம் இல்லை. இவ்வாறு கருதிப், பொருளிட்டி வருவதற்காகச் செய்யும் தொழில் முயற்சிகளை விரும்பிய நெஞ்சினர் ஆயினவர் நம் தலைவர். அவா -

பல புரிகளால் முறுக்கப் பெற்றதும், நீண்ட கயிற்று ஒழுங்கினையுடையதுமான வண்டியினை, எருமைக்கடாக்களின் வலிமையான பிடரிலே கொளுவிப் பூட்டித், துறைகளின் ஏற்றங்களிலே கொண்டு செல்லுபவர் உப்பு வாணிகர்கள். அவர் உரப்பும் ஒசையைக் கேட்டு, ஆண்மானும் பெண்மானும் ஆகிய மானினங்கள் அச்சமுற்றனவாக நிலைகெட்டு ஒடத் தொடங்கும். காடுகள் தம் அழகெல்லாம் அழிந்து போயினவாகுமாறு கோடையானது பரவி நிலைபெற்று நீரினை உண்டுவிட, வற்றிய அழகிய பெரிய நீண்ட மூங்கில்களின் கணுக்களும் பிளப்புண்டு போகும். அவற்றினின்றும் கழுவப்பெறாத முத்துக்கள் தெறிக்கும். அவை, கழங்காடு காய்களைப் போன்ற தோற்றமுடையவாய்ப் பழைய குழிகளிலே சென்று விழும். அப்படிப்பட்ட இடங்களையுடையன, இனிய களிவெறியினைத் தரும் கள்ளினையும், இயலுகின்ற தேரினையும் உடைய நன்னனது வானளாவிய நெடிய மலைச்சாரல்கள். அவற்றின் ஒருபக்கத்ததாகிய பொன் கிடைக்கும் இடங்களையுடைய மலைப்பகுதியைக் கடந்து சென்றிருக்கின்றனர்.

“நறிய நுதலினை உடையவளே! கரிய தண்மையான கூந்தலை உடையவளே! அரிய துன்பங்கொண்டு வருந்தாதே! சிலநாட்கள் பொறுத்துத் தாங்குதல் வேண்டும் என்று கூறி, நின்னுடைய நல்ல மாட்சியுடைய ஒளிபொருந்திய வளையல் களைத் திருந்தினவர் அவர். அவர் அப்படிச் செய்தவராயின் விரைவிலே வந்து விடுவார். தோழியே! நீ வாழ்வாயாக’ என்று, பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தினாள் என்க.

சொற்பொருள்: 1. அறம் - இல்லறத்திற்கான நெறிமுறைகள். 2. ஊன்றல் - பாதுகாத்தல். 5. மை - கருமை; ஈர் - தண்மை; பெரிய, ஒதி - கூந்தல், படர் - துன்பம். 7. எல்வளை ஒளியுடய வளை. 9. வார் நீண்ட ஒழுகை - வண்டி10. விளி கூப்பீடு.1.உழைமான் - ஆண்மான். 12, 13 கோடை நின்றுதின - கோடை நிலைபெற்று