பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன். 175

பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைத் தோல்முலைப் பினவொடு திளைக்கும் வேனில் நீடிய சுரன் இறந்தோரே.

தோழியே! என் அம்மையே, நீ வாழ்க! “போர்ச் செயல் களிலே நல்ல பயிற்சிபெற்று விளங்கும் யானைகளையுடையவன், வெற்றியுடன் போர் புரிபவனான பாண்டியன். அந்த யானைகள், பொன்னாலாகிய விட்டுவிட்டு ஒளிரும் அழகிய ஒளியுடன் அசைந்து கொண்டிருக்கும்.அழகுமிகுந்த நெற்றிப்பட்டத்தினை உடையவையாயும் இருக்கும். அவனுக்கு உரியது, புகழ் மலிந்த சிறப்பினையுடையதான கொற்கை என்னும் முன்துறை. அவ்விடத்தே, தழையுடை அணிதலாற் பொலிவுற்ற, பக்கங்கள் உயர்ந்து விளங்கும் அல்குலினை உடையவரான பழையரின் பெண்கள், விளங்கும் ஒளியினையுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்கினையும் சொரிந்து, குளிர்ந்த கடற்றுறைக்கண் தெய்வத்தைப் பரவுவர். பகலோனாகிய ஞாயிறானது மறைந்த அந்தி வேளையாகிய அந்த அரிய பொழுதிலே, அச்சம் பொருந்திய பெருங்கடலானது நிறைமதி நாளிலே பொங்கி எழுந்தாற்போல, அலரும் மன்றினிடத்தே பொங்கிப் பரவும். தாயும், இமை பொருந்தாத கண்ணினளாக வெம்மையுடன் மூச்செறிந்து கொண்டிருப்பாள்,” என்றெல்லாம் கூறியவளாக, ஏனோ மிகவும் வருந்தியவள் ஆயினை!

தோழியே! பழையதாகிய, வானத்திலே புகுந்தாலொத்த சிகரங்களையுடைய மலையின் சாரலிடத்தே, பெருங்கை யின்ையும் பிளந்த வாயினையுமுடைய ஆண் கரடியானது, இருளைத் துணித்து வைத்தாற்போன்ற கருமயிரடர்ந்த குட்டியுடனும், திறங்கிய முலையினையுடைய தன் பெண் கரடியுடனும் கூடி மகிழ்ந்திருக்கும். வேனில் நெடிதாகப் படர்ந்த அத்தகைய சுரநெறியைக் கடந்து சென்றவர் நம் தலைவர்.

அவர், சோழரது வெண்ணெல் விளையும் ஊர்களை யுடைய நல்ல நாட்டையே பெறுவதானாலும் கூட, நின்னை மறந்து அங்கே மனம் பொருந்தித் தங்கிவிடுபவர் அல்லர்.

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகளுக்குத் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 2. ஒடை - நெற்றிப் பட்டம். வினைநவில் - போர்த் தொழில் பயின்ற.6 கோடேந்து அல்குல்-பக்கம் உயர்ந்த அல்குல். 7. பழையர் மகளிர் - பரதவர் மகளிர் 12. கை அற்றனை வருந்தினை. இகுளை தோழி! 15. தலைய உச்சிகளையுடைய