பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
194
அகநானூறு - மணிமிடை பவளம்
 


கொலைத் தொழிலினை உடையவரான கொடிய பரதவர்கள் குறுகிய இறைப்பினையுடைய குடிசையிலே வாழ் பவர்கள். அவர்களால் எறியப்பட்ட உளியினால் தாக்கப்பட்ட களிப்புப் பொருந்திய பெரிய மீன், வானத்தை அழகு செய்யும் வானவில்லைப்போல உயரே தாவித் துள்ளும். அதன் புண்ணினின்றும் ஒழுகும் குருதியினால் புலால் நாற்றமுடைய கடலின் நிறமும் நெந்நிறமாக மாறுபடும். திவலைகளையுடைய அலைகள் செறிந்த கடற்பரப்பை எல்லாம் அம்மீன் கலக்கிவிட்டுப், பின் தன்னுடைய வலியனைத்தும் அழிந்து போக, வரிசையாக இருக்கும் படகுகளின் பக்கத்திலே வந்து சேரும். அத்தகைய துறையினை உடையவன் நம் தலைவன்.

நள்ளிரவிலே, நம்முடைய பணைத்த தோள்களைத் தழுவுதலை நினைத்து, இவ்விடத்தே வந்த அந்நாளிலே, அவன் நம் ஊர்க் கானற் சோலையினையுடைய பெருந்துறையின் அழகினைப் பாராட்டி, அளவில்லாமல் புகழ்ந்தனன்.

இப்பொழுதோ, தன்னுடைய வனப்புடைய மார்பிலே யாம் கண்துயிலும் அந்த உறவினை அவன் மாற்றிவிட்டனன். 'தாழைகள் தாழ்ந்து கிடக்க, அதன்கிளைகள் தேரின் செலவைத் தடுக்க, நாம் அவ்விடத்தே செல்வதும் அரிது’ என்றும் சொல்லுகிறான் என்பார்கள். அதனை நாமும் பலமுறை கேட்டுவிட்டோம்.

என்று, தோழி தலைமகன் சிறைப்புறமாக இருக்கத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. குறியிறை - தாழ்வான இறைப்பு. குரம்பை - குடிசை. 2. உளி - மீன் எறியும் கருவி. ஏ.முறு - களிப்புப் பொருந்திய 3. மறுப்பட நிறம் வேறுபட 4 விசும் பணி வில் - வானவில்.பிதிர்-திவலைகள்.5.அழுவம்-நெருங்கிய கடற்பரப்பு. உரன் - வலிமை. 6. திமில் படகு, 9. கவின் - அழகு.12. கைதை - தாழை, படுசினைதாழ்ந்த கிளை. -

உள்ளுறை: பரதவரின் உளி பொருது புண்பட்ட மீன், கடல் நிறத்தை மாறுபடுத்தக், கடல் துறையையும் கலக்கி, தன் வலியழிந்து, படகு ஒரத்திலே வந்து ஒதுங்கும் என்றனள்; அது தலைவனால் நலன் நுகர்ந்து கைவிடப்பட்ட தலைவியானவள், பிரிவுத்துயரால் தன் அழகு கெட, அதனால் இற்பழியாகி, ஊரும் அலர்தூற்றக் கலங்கி, முடிவிலே வலியழிந்து இறந்து போவதே நிலைமையாயினள் என்பதனைச் சுட்டிச் சொன்னதாகும்.

பாடபேதம்: 6படருந் துறைவன்.