கொண்டிருப்பாளைப் போல விளங்கும் ஒளியுடைய அழகு குடியிருக்கும் திருமேனி வனப்பினை உடையவள் தொகுதியான கொத்தாகிய ஐவகையான முடிக்கின்ற கூந்தலை உடையவள். கிளைத்த தூறாகிய நாணற்கிழங்கானது மணற்பாங்குகளிலே ஈன்றிருக்கும் முளையினைப்போன்று விளங்கும் கூர்மையான பற்களை உடையவள்; சிவந்த வாயினை உடையவள் யாழின் நயம் உணர்ந்த வல்லான் ஒருவன் இயக்க, அந்த நல்ல யாழிலேயிருந்தும் எழுகின்ற செவ்வழிப் பண்ணின் இசை நயத்தைக் கேட்டாற்போன்ற, மிக்க இனிமையான பேச்சினை உடையவள்; அணங்கினைப் போன்ற பேரழகுப் பெண்ணான அவள்! நெஞ்சே, அவளை நீயும் விரும்பினாய்.
பெரிய களிற்றியானைகளினது கூட்டமானது இறங்கிக் குடிக்க, அதனால் கலங்கற்பட்டுத் தோன்றும் நீரினைப்போல நீயும் கலக்கமுறுவாய். அப்போதும், ‘இவள் நம்மால் அடைவதற்கு அரியவள் என உணர்ந்து ஒதுங்கமாட்டாய். நாள் தோறும் அவளை அடைய விரும்பித், துன்பத்தையுடைய அரிய சுரநெறியைக் கடந்துவருமாறும் செய்தாய். அதனால், என்னைத் துன்பத்தின்பாலும் செலுத்தினாய். எளியவள் அல்லளாகிய அவளையே இடைவிடாது.எண்ணி, நீங்காத அந்த நினைவினாலேயே, தீராத துயரத்தினையும் என்பாற் சோத்துவிட்டாய்.
தேனொழுகும் மாலையினை அணிந்திருக்கும், போர்மறம் சிறந்த சேரன் செங்குட்டுவன், படைக்கலன்களின் ஒலி நிலவொளி போல விளங்கிக் கொண்டிருக்கும், கடல்போன்ற தன் பெரும் படையுடன் விளங்குபவன். அவன், மின்னலிட்டு வானைப்பிளந்து வலிமையுடன் விளங்கும் கார்மேகத்தைப் போலப் பகைத்து எழுந்தான் கூற்றத்தைப்போன்ற வலிமையுடன் புறப்பட்டான். பல மொழியாளர்களும் விரவியிருக்கும் தன்னுடைய போர்ப்பாசறையைத் தேவையான இடங்களிலே எல்லாம் அமைத்துக்கொண்டு எங்கும் சுற்றினான். அவனுடன் போரிடத் துணிந்த பகைவர்கள் எவரையும் பெறாமற்போக, அதனால் எழும் சினமும் அதிகமாகப், போர் செய்யும் வலிமையுடன் கடலையே வளைத்து முற்றுகையிட்டான். உயர்ந்த அலைகளையுடைய கடலும் பிறக்கிட்டுச் செல்லுமாறு ஒட்டி வெற்றியும் பெற்றான். அப்படி வெற்றிபெற்ற அவனுடைய நீர்மையால் மாண்புற்ற வேலானது நின் மார்பிடத்தே சென்று தைப்பதாக! நினது மிகுதியான செருக்கும் அழியப் பெறுவாயாக!
என்று, அல்ல.குறிப்பட்டுநீங்குந் தலைமகன் தன்நெஞ்சினை நோக்கிச் சொன்னான் என்க.