பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 199

சொற்பொருள்: 1. தாவில் - குற்றமற்ற, தைஇய செய்யப் பெற்ற 2. இளவெயில் கொண்டு - இளவெயிலைப் போர்த்துக் கொண்டு. 4. அரில் - துறு. 5. துவர் வாய் - சிவந்த வாய். 6. நயவன் - நயமறிந்த யாழ் வல்லோன். தைவரும் - நரம்புகளைத் தடவி இசை எழுப்பும் 7. இன்தீம் கிளவி - இனிமை மிகுந்த பேச்சு. 10. பெறலருங் குரையள் .பெறுவதற்கு அருமையான தன்மை யுடையவள். 12. மின்னு வசிபு - மின்னலிட்டுப் பிளந்து. 13. கார் - மேகம், இங்கு இடியேற்றைக் குறிப்பதுமாகலாம். 14. கட்டுர் - கட்டுதலைக் கொண்ட ஊராகிய பாசறை. 16. மட்டு - தேன். தெரியல் - மாலை. 20. நீர் மாண் எஃகம் - தகைமையால் மாண்புடைய வேல். 21. மதன் - செருக்கு 23. விளியா எவ்வம் - நீங்காத பெருந் துயரம். -

விளக்கம்: செங்குட்டுவன், கடல் பிறக்கோட்டிய செய்தியைப் பதிற்றுப்பத்தும் பிறவும் கூறும். இது, கடலிடையேயுள்ள ஒரு தீவிலே இருந்துகொண்டு, வரும் கலங்களை எல்லாம் கொள்ளையிட்டு வந்த ஒர் கூட்டத் தினரைக், கடற்படையுடன் சென்று வென்றது என்பர். இவன் வெற்றிகளுள் இதுவே சிறப்பாகக் கருதப்பட்டு, இவனும் கடற் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்ற புகழ்ப்பெயரையும் பெற்றான். இதனாற் பண்டை நாளில் கடல் வாணிபத்தில் நம்மவர் சிறப்புற்றிருந்ததும், அவரது நாவாய்ப் பெருக்கமும் புலனாகும்.

பாடபேதங்கள்: 14. மொழித் தகடுர், 17 விலங்கிய சினம். 18. முன்னர்முற்றி, 22 அல்லோட்கு வருந்தி,

213. சுவர்க்கமும் அமிழ்தும்!

பாடியவர்: தாயங் கண்ணனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. சிறப்பு: வடுகர் இடுகின்ற நாட்பலி, வானவனின் கொல்லிக் குடவரையின் மூங்கில், காவிரியின் அறல் பட்ட மணல், ஆகியவை பற்றிய செய்திகள்.

(பிரிந்து சென்ற தலைவன், குறித்த காலம் கடந்தும் மீளாதவனாக வருந்திய தலைவிக்கு, அவளுடைய தோழி, அவனுடைய காதல் உறுதியைக் கூறி, அவன் வருவான் என வற்புறுத்தி, இப்படித் தேறுதல் உரைக்கின்றாள்.)

வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்குவெள் அருவி வேங்கடத்து உம்பர்க்,