பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 205

அவ்விடத்தே, பிரிந்து சென்றவரான தம் தலைவருக்காக இரங்கித் துன்புறும் நெஞ்சத்துடன், அவரைப் பிரிந்து இவ்விடத்தே வாழ்ந்திருத்தலைச் செய்யக்கூடிய மகளிர்க்கு,

குறுக்கிடும் பெரிய மலையுச்சிகளையுடைய மலைக்கு அப்பாலுள்ள, வேறுபட்ட பலப்பல மொழிகள் வழங்கும் நாடுகளை நினைவிற் கொண்டு, வினை செய்தலை விரும்பிச் செலுத்தும் வலிமிகுந்த நெஞ்சத்துடனே, அழகிய மாண்புற்ற வேலினை வலக்கையிலே ஏந்தியவராகச் செல்லுதலிலே மாட்சியுற்ற நும்மிடத்திலே, விரைவிலே வெற்றி பெறுவீராக’ என வாழ்த்தி விடை தருதலும் நன்றாகும்; (ஆனால், யாம் அங்ஙனம் பிரிந்து வாழ்தலை ஆற்றோமே? என் செய்வோம்? எப்படிப் பிரிவிற்கு இசைவோம்?)

என்று, செலவுணர்த்திய தோழி தலைமகள் குறிப்பறிந்து தலைமகனைச் செலவழுங்குவித்தனள் என்க.

சொற்பொருள்: 2. விலங்குதல் - குறுக்கிடுதல். 2. வேறுபன் மொழிய தேஎம் - பல்வேறு மொழிகளையுடையவாகிய வடதிசை நாடுகள். 3. பரிக்கும் - செலுத்தும். 5. வல்லே - விரைந்து. 7. கருத்தது-எண்ணியது.8 கவ்வும் கடிக்கும்.10. வடிநவில் அம்பு - வடித்தல் செய்த கூரிய அம்பு. 11. பதுக்கை - புதைகுழியின் மேலுள்ள கற்குவியல். 14. மொசி விரல் - நெருக்கமான விரல்.

மேற்கோள்: வேறு பன்மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப் போர்த்தொழிலைச் செலுத்தும் உரன்மிக்க நெஞ்சம்’ என்றலின், இது குறுநில மன்னன் தன் பகைவன் நாடு கொள்ளச் சென்றதாம், வேந்தன் எனப் பெயர் கூறாமையின்’ என்று, முடியுடைய வேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள் குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது என, இதனை, வேந்து வினையியற்கை என்னும் பொருளியற் சூத்திர உரையிலே நச்சினர்க்கினியர் காட்டுவர்.

216. வேல் பாய்ந்த களிறு!

பாடியவர்: ஐயூர் முடவனார். திணை: மருதம், துறை: தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தனக்குப் பாங்காயி னார்க்குப் பரத்தை சொல்லியது. சிறப்பு: ஆதன் எழினியில் ஆற்றலை உரைத்திருப்பது.

(தான் ஒரு தலைவனுடன் தொடர்புகொண்டதனால், அவனுடைய மனை, தன்னைப் பழித்தது கேட்டவளாகிய ஒரு பரத்தை, சினமுற்றுத் தன் தோழியர்க்குச் சொல்வது போலத், தலைவியின் தோழியர் கேட்குமாறு கூறுகிறாள்.) -