பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன்223

ஒடும். வீட்டுப் பெண்கள் பதமாகக் காய்ந்த அரிசியைப் பெய்து,சுற்றுவதிலே ஈடுபட்டிருக்கும் மரத்திரிகையின் குரல் ஒலிபோல, வரிப்பட்ட மணற்பாங்கிலே, சுழலும் கதிரினையுடைய சக்கரங்கள் பிளந்து ஊடறுத்துக் கொண்டு ஒலியுடன் செல்லும். இவ்வாறாக, நம்முடைய இனிய உயிர்த்துணையான காதலரும் இன்று வருவாரோ?” என்று கேட்டு, எதிர்பார்த்திருப்பவள் என் தலைவி.

சிலவாகிய கோற்றொழில்களையுடைய ஒளிபொருந்திய வளைகளை ஒலியாதே ஒடுக்கிப், பலமுறை அரிய காவலுடைய பெரிய மனையினைப் பார்த்துப் பார்த்து, இரங்கத் தக்கவளாகிய திருந்திய அணிகளையுடைய அவள் வருந்திக் கொண்டேயிருப்பாள். அதனால் பாகனே! இன்று இரவுப் பொழுதிற் குள்ளாகவே சென்று சேருமாறு, நம் தேர் மிகவும் விரைவாகச் செல்லுமாக;

என்று, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 2 அடங்கு கயிறு கடிவாளக் கயிறு. 3. விசைத்தல் - வலித்தல். 5. கால் கடுப்பு - காற்றின் விரைவு. இவுளி - குதிரை. 7. பால்கடைநுரை - பாலேடு. 6. தெவிட்டல் - வாய் நுரை. நுணக்கம் - மெல்லிய வீழ்ச்சி. 10. புதுநலம் - மழையாற் பெற்ற புதுச்செழிப்பு: கார்ப்பருவ வரவை இது காட்டும்.

      225. தனித்து இருப்போமோ?

பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார் திணை: பாலை. துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

(உள்ளத்தில், பொருள் தேடிவருதல்வேண்டும் என்னும் ஆர்வம் ஒரு தலைவனுக்கு மிகுதியாயிற்று. அவனால், அவன் காதலியைப் பிரிந்து செல்லவும் இயலவில்லை. இரண்டிற்கும் இடையே உழன்று கொண்டிருந்த தன் நெஞ்சிற்கு, இவ்வாறு கூறித் தன் போக்கை நிறுத்திவிடுகிறான் அவன்)

அன்பும், மடனும், சாயலும், இயல்பும், என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும், ஒன்றுபடு கொள்கையொடு ஒராங்கு முயங்கி, இன்றே இவணம் ஆகி, நாளைப், புதலிவர் ஆடுஅமைத் தும்பி குயின்ற 5