பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
228
அகநானூறு - மணிமிடை பவளம்
 


227. நோயின்றி வாழ்க!

பாடியவர்: நக்கீரர். திணை : பாலை, துறை: 1.தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. 2. பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: தழும்பன் என்பவனது ஊணுணர்க்கு அப்பாலுள்ள மருங்கூர்ப் பட்டினத்துக் கடைத் தெருவின் சிறப்பு.

(1. தலைமகன் தொழில்மேற் சென்றவன், வருவதாகக் குறித்த நாளிலே வராமை காரணமாகத் தலைவி வருத்தமுற்று உடல்நலமும் குன்றி வேறுபாடு கொண்டனள்; அப்போது, அவளைத் தேற்றுவாளாகத் தோழி சொல்லியது. 2. தலைமகளின் துயரங்கண்ட தோழி தானும் வருந்தினள்; அப்போது அவளைத் தேற்றுவாளாகத் தன் உள்ளம் உறுதியுடையது என்பாள் போலக் காட்டித் தலைவி சொல்லியது.)

        நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே;
        திதலை அல்குல் வரியும் வாடின:
        என்ஆ குவள்கொல் இவள்?’ எனப் பல்மாண்
        நீர்மலி கண்ணொடு நெடிதுநினைந்து ஒற்றி,
        இனையல்-வாழி, தோழி!-நனை கவுள் 5

        காய்சினம் சிறந்த வாய்புகு கடாத் தொடு
        முன்நிலை பொறாஅது முரணிப், பொன்னினர்ப்
        புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப,
        முதல்பாய்ந் திட்ட முழுவலி ஒருத்தல்
        செந்நிலப் படுநீறு ஆடிச், செருமலைந்து, 10

        களம்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
        பலஇறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
        நோய்இல ராக, நம் காதலர்! - வாய்வாள்,
        தமிழ் அகப் படுத்த இமிழிசை முரசின்
        வருநர் வரையாப் பெருநாள் இருக்கை, 15

        தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்
        பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்
        கடிமதில் வரைப்பின் ஊணுர் உம்பர்,
        விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்.
        இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, 2O

        எல்லுமிழ் ஆவணத்து அன்ன,
        கல்லென்கம்பலை செய்து அகன்றோரே!