பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 231
 


        கண்என மலர்ந்த மாஇதழ்க் குவளைக்
        கல்முகை நெடுஞ்சுனை நம்மொடு ஆடிப், 5

        பகலே இனிதுடன் கழிப்பி, இரவே
        செல்வர் ஆயினும், நன்றுமன் தில்ல-
        வான்கண் விரிந்த பகல்மருள் நிலவின்
        குரல் மிளைஇய சாரல் ஆர்ஆற்று,
        ஓங்கல் மிசைய வேங்கை ஒள்விப் 10

        புலிப்பொறி கடுப்பத் தோன்றலின், கயவாய்
        இரும்பிடி இரியும் சோலைப்
        பெருங்கல் யாணர்த்தம் சிறுகுடி யானே.

தோழி! தேனுண்ணும் வண்டினம் பலவும் மொய்த்து ஆரவாரிக்கக், கல்லென்ற ஒலியுடனே வரையினின்றும் இறங்கும் அருவியானது, சந்தனமரத்தை மோதி அதனைத் தண்ணென்னும் படியாக நனைத்துவிடும். குளிர்ச்சிபொருந்திய மலைப் பக்கங்களிலே, கண்போன்று மலர்ந்துள்ள க்ரிய இதழ்களையுடைய குவளை மலர்கள் நிறைந்த, மலையிடுக்கிலேயுள்ள நெடிய சுனையிலே, நம்மோடுங்கூடிப் புனலாடிப் பகற்பொழுதை இனிதாக நம்முடன் அவர் கழிப்பாராக வானிடத்தே கதிர்பரந்து விளங்கும் ஞாயிற்றைப்போலத் தோன்றும் நிலவொளியிலே, பிரப்பங் காட்டினையுடைய சாரல் பொருந்திய வழியிலே, மலைமேலுள்ளவாகிய வேங்கை மரத்தின் ஒளியுள்ள பூக்கள், புலியின் மேலுள்ள புள்ளிகளைப் போலத் தோன்றுதலால், பெரிய பிடியானைகள் அதனைப் புலியெனக் கருதி அஞ்சி ஒடித்திரியும் சோலையினையுடைய பெரிய மலையிலேயுள்ள, புதுவருவாயுடைய தம்முடைய சிறிய ஊருக்கு, இரவினிலே அவர் செல்வார் என்றாலும், அது மிகவும் நன்மையாகும்.

என்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. பிரசம் - தேன்; பிரசப் பல்கிளை - தேன் வண்டுகளாகிய பல இனங்கள்.4, மா இதழ் - கரிய இதழ். 8. பகல் - ஞாயிறு: பகற்போதும் ஆம் 9. சூரல் - பிரப்பங் கொடி மிளை காடு. 10. ஓங்கல் - உயர்ந்த மலை. 11. கயவாய் - பெரிய வாய். 13. யாணர் - புதுவருவாய் மலைபடு பொருள்கள் பலவும் என்க.

விளக்கம்: ‘வான் கண் விரிந்த பகல் மருள் நிலவில் இரவே செல்வர் ஆயினும் நன்று' என்றமையால், அது ஊரலர் எழக் காரணமாவதுபற்றி, இரவுக்குறியும் மறுத்துப் பகற்குறி வேட்டனள். பகற்குறியும் வாய்ப்பது அரிதாகலான் வரைந்து