பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/263

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


248 அகநானூறு - மணிமிடை பவளம்

ஐய அமர்த்த உண்கண்நின்

வைஏர் வால்எயிறு ஊறிய நீரே!

ஆய்ந்தெடுத்த அணிகள் பூண்ட தலைவியே! புல்லிய காம்பினையுடைய பாதிரியின் வரிகள் பொருந்திய நிறமுடைய திரட்சி கொண்ட மலர்கள், மெல்லிய கொடியாகிய அதிர லோடுஞ் சேர்ந்து, நுண்மையான மணலிடத்தே அறலுண்டானது போலக் கோலஞ் செய்து கிடக்கும். அரவின் பல்லினைப்போன்ற அம்புகள் முதிர்ந்த, குராவினது வண்டினம் ஒலிக்கும் நறிய கொம்புகளிலே, தென்றற் காற்று ஊடறுத்துச் செல்லும். குயில் கூவுதலைக் கற்றுப் பயின்று கொண்டிருக்கும் இத்தகைய இளவேனிற் காலத்தும், இரவுப் பொழுதானது ‘துயிலின்றி இன்னாதாகக் கழியும் என்று சொல்லி, நினது நல்ல மாமை நிறத்தையுடைய மேனியின் சிறந்த அழகு கெட்டழிய வருந்தியிருத்தலைக் கைவிடுவாயாக.

மூண்டெறியும் வலிய செந்தீயிலே சுட்டெடுத்த வளமையான நிணத்தின் கொழுமையான துண்டுகளை, மெல்லிய தினையரிசிச் சோற்றுடன் சொரிந்த உண்கலத்துடன், பெரிய நெற்கதிர்கள் அசைந்து கொண்டிருக்கும் வயல்களிலே, முற்றிய கரும்பின் தண்டினைப் பிழிந்து எடுத்த அழகிய சாறுகாய்ச்சி எடுத்த பாகினுடனே, பாலும்பெய்து அளாவிய செந்நெல்லின் பசிய அவலையும், வருவார்க்குப் பகுத்துக் கொடுக்கும் சிறப்புடையது, நீர் மோதுகின்ற வாய்த்தலைகளை யுடைய உறையூர் நகர். அதனையே பெறுவதானாலும்,

கடைசிவந்து, வியக்கும் வகையிலே அமர்த்து விளங்குவன நின்னுடைய மையுண்ட கண்கள்; நினது அழகு பொருந்திய கூரிய வெண்மையான பற்களின் இடையிலே ஊறிய நீரினை உண்ணாது, செய்வினை காரணமாகத் தவிர்ந்து இருப்பவரல்லர், நின் காதலர்.

என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீ இயினாள் என்க.

சொற்பொருள்: 1. திரள்வீ - திரட்சியான மலர்கள். 2. அதிரல் - காட்டு மல்லிகை. 5. குரல்கற்ற - குரல் பயின்ற; பிறகாலங்களிற் கூவுதலின்றி இளவேனில் காலத்துமட்டுமே கூவுதலாற் கற்ற’ என்றனர். 7. மாமேனி - மாமை - நிறமுடைய மேனி. 10. புன்கம் - தினைச்சோறு. 1. இருங் கதிர் பெரிய கதிர். 12. சேறு - பாகு 13 பாசவல் - பசிய அவல் 14. புதவு - வாய்த்தலை,