பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


250 அகநானூறு - மணிமிடை பவளம்

இரைகொள்ளுதலை விரும்பிப் புறப்பட்டது, பணந்தண்டினைப் போன்ற பிடரியினையும் பல கோடுகளையுமுடைய ஆண் புலி. மடப்பம் பொருந்திய கண்ணினையுடைய காட்டுப்பசுவானது தொலைவிலே நின்று அலறுமாறு, பெரிய கொம்பினை உடைய தலைமை பொருந்திய அதன் ஏற்றினை, அகன்ற இடத்தினையுடைய காட்டிலே வலப்பக்கம் வீழுமாறும் அது கொன்றது. பின் பெரிய மலையை அடுத்திருக்கும் அகன்ற பாறைகள் குருதியால் சிவக்குமாறு அதனை இழுத்துக் கொண்டும் போயிற்று. அத்தகைய பெரிய மலைகளையுடைய நாட்டின் தலைவனே! இவளை நீ பிரிந்து செல்வாயானால் -

இரவலர்களுக்கு அணிகள் பூட்டிய நெடுந்தேரைக் களிறுகளிடனே எந்நாளும் மழை சுரந்தாற்போலக் கொடுக்கும் கொடையினையும், மிகுதியான வள்ளல் தன்மையினாலே வரும் மகிழ்ச்சியினையும், கழலவிட்ட தொடியணிந்திருக்கும் பெரிய கைகளையும், செருக்குடைய குதிரையினையும் உடையவன் கண்டீரக்கோப் பெருநள்ளி என்பவன். அவனது, செறிந்த அரும்புகள் கட்டவிழ்ந்த நறிய கரிய மலைச்சாரல்களிலே, பனையின் அடிப்பக்கத்தே நிலைபெற்றுள்ள காந்தளது மெல்லிய அரும்புகள் பிணிப்பவிழ்ந்த அலர்ந்த, தண்மையான மணக்கும் புதுமலரின் நாற்றம் போன்ற மணமுடைய நுதலினை உடையவளுக்குப், பிரியின் சாவாது காத்தற்கு உரியதான ஒரு மருந்தினையும் நீ உடையையோ? (உடையை யாயின் பிரிக; இன்றேல் பிரியாதிருப்பாயாக);

என்று, இரவுக்குறிவந்த தலைமகற்குத் தோழி சொன்னாள் 6.

சொற்பொருள்: 1. இறும்பு - காடு, 2. பிண - பெண்புலி. 5. போத்து - ஆண்புலி 7. தடக்கோடு - வளைந்த கோடுமாம். 13. வண்மகிழ் - வள்ளன்மையாலே மகிழும். 15. அடுக்கம் - மலைச்சாரல்.

விளக்கம்: இரவுக்குறி வந்தவனிடம் பிரியாதே என வற்புறுத்திக் கூறுவது வரைந்து கோடலுக்குத் தூண்டுவதன் பொருட்டு, காட்டின் ஏதம் கூறினாள், அதனால் இரவுக்குறிக்கும் தாம் இசையாத தன்மையை விளக்குதற் பொருட்டு புலியின் செயலைக் கூறினாள், அவ்வாறே தலைவனும் இல்லறம் மேற்கொண்டு தலைவியைப் பேணிக் காக்கவேண்டும் என்றற் பொருட்டு.

பாடபேதங்கள்: 5. பணைமருள். 14. கடுமாண் நள்ளி