பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


264 அகநானூறு - மணிமிடை பவளம்

யான கொம்புகளைச் சுட்டிக் காட்டி, மன்றிலே ஒடி யாடும் தம் புதல்வனின் புல்லிய தலையினைத் தடவி, அவற்றை வேட்டையாடிக் கொண்டு வருவதற்கு எழுவார்கள்.

அரிய போர்முனைகளையுடைய அத்தகைய பாக்கத்திலே இரவிலே தங்கி இருந்து, பொழுது விடியவும், நிழல்படுமாறு அழகுடன் விளங்கும் நீண்ட அரையினையுடைய இலவமரத்தின் அசையுங் கிளைகளிலேயுள்ள, நெருப்புச் சுடர்விட்டு எரிவதுபோன்ற ஒளியுடைய பூக்களிலே, குழலிசை போன்று வண்டினம் மொய்த்து ஆரவாரிக்கும் அவ்விடத்தே, உயரமற்ற பாறையிலே அவை உதிர்ந்து, காய்ந்து கொண்டிருக்கும் சுள்ளிபட்ட வெள்ளெலும்புகள் போல விளங்க, வேகம் அமைந்த கால்களையுடைய ஒட்டகத்தின் மிகுந்த பசியினை அவை போக்கும். கற்கள் பொருந்திய கவர்த்த நெடுவழிகளையுடைய இத்தகைய காட்டைக் கடந்து, அழகிய மாமை நிறத்தையுடைய நம் தலைவி தனித்திருக்குமாறு கைவிட்டுச் செல்வாயாக! யான் அவளைக் கை விட்டுப் பிரிந்து நின்னுடன் வருதலில்லேன்;

என்று, பொருள் கடைக் கூட்டிய நெஞ்சினைக் கழறித் தலைமகன் சொன்னான் என்க.

சொற்பொருள்: 2. நன்று - நற்செயல் காட்சி - தெளிவு. 3. மதுகை - மயக்கம்5. திரங்கு - வாடும். 6. பண்பில - பண்பற்ற 9. அரியலாட்டியார் - கள்ளினை விற்கும் பெண்டிர். 10. நொடை - விலைப்பணம், 17 ததர் - கள்ளி.

விளக்கம்: கள்ளுக்கு விலையாகக் களிற்றியானைக் கொம்புகளை வேட்டையாடி வருவதற்கு மறவர் தலைவர்கள் எழுகின்ற அரிய போர்முனைகளையுடைய காடு என்க. பாறையிலே உதிர்ந்து காய்ந்து கிடக்கும் இளமலர்கள், சுள்ளிபட்ட வெள்ளெலும்பு போலத் தோன்றி ஒட்டகத்திற்கு உணவாகும் காடு எனவும் கொள்க.

பாடபேதங்கள்: 6. செல் சமத்து எறியும் அன்பில் வாழ்க்கை 18. கடுங்கால் வேட்டத்து அல்குல் பசி,

246. ஆர்ப்பினும் அலர் பெரிதே’ பாடியவர்: பரணர் திணை: மருதம் துறை: தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. சிறப்பு: கரிகால் வளவனின் வெண்ணிப் பறந்தலைப் பெரும்போர்; அழுந்துரிலே எழுந்த ஆரவாரம் முதலிய செய்திகள். -

(தலைவன், ‘புது நீர் விழாவிலே பரத்தையுடன் நீர் விளையாடலிலே திளைத்தான் என்று ஊடல் கொண்டிருந்த