பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


276 . அகநானூறு - மணிமிடை பவளம்

விளங்கும் வெண்மையான அருவிகளையுடைய அத்தகைய மலைவழிகளுக்கும் அப்பாலுள்ள,

மாசற்ற வெண்மையான கொம்புகளையும், தலைமைச் செருக்கையும் உடைய யானையானது, தன்னைக் கடித்துக் கொல்லுதலின்றும் தப்பிய அரிய நிறத்தையுடைய வலிமையான புலியினைப் பெரிய நிலம் பள்ளமாகுமாறு தன்கொம்புகளால் வீழ்த்திக் குத்திக்கொன்றது; அந்த வெற்றிச் செருக்குடன், காவலேதும் இல்லாது அது தங்கியிருக்கும் தேக்கு மரச் சோலைகளையுடைய தொலையாத நெடுவழியினையும், கடந்து சென்றுள்ளனர் நம் தலைவர்.

அப்படிச் சென்று, அரத்தல் போழ்ந்து செய்யப்பெற்ற நம் அழகிய வளைகளைத் தம் பழைய நிலையினின்று நெகிழுமாறு செய்தவர் அவர். மகா பத்மநந்தன் என்னும் பாடலிபுரத்து மன்னனுடைய செல்வத்தையே அவர் பெற்றாரென்றாலும், அதற்கு மகிழ்ந்து, அவ்விடத்தேயே தங்கி விடுபவர் அல்லர். விரைவிலேயே திரும்பி வந்துவிடுவர். நின் தோள் வளைகளும் மீண்டு செறிவுறும். கூந்தல் சூழ்ந்த ஒளியுடைய நின்நெற்றியின் பசலையும் இனி மறைந்து நீங்கும்! (அதனால் வருந்தாது இருப்பாயாக);

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. தூது தூதர்கள் செற்றும் - செறிவுறும். 3. வீங்கிழை - செறிவுடன் விளங்கிய அணிகள். செல்லல் - வருத்தம். 5. வெறுக்கை - செல்வம். துனைகால் அன்ன - விரைந்த காற்றைப்போன்ற துனைவு-விரைவு.8.தொன்முதலாத்து-மிக்க முதுமை வாய்ந்த ஆலமரத்து. 9. கடிப்பு. இகுத்து இரங்கா - குறுந்தடியினால் அடிப்புண்டு முழங்க.10. தெம்முனை - கொடிய போர்முனை. 12. மோரியர் - மெளரியர்கள். 17. புகலொடு - செருக்கொடு.

விளக்கம்: ‘நந்தன் வெறுக்கை எய்தினும் என்றதனால், தலைவன் மன்னன் எனவும், வடநாட்டிலே போர் வெற்றி கருதிச் சென்றவன் எனவும் கொள்ளலாம். பழையன் கோசர்க்குப் பணியாததனால், அவருக்கு உதவியாக வந்த வம்பர்களாகிய மோரியர் எனக் கொள்க.

பாடபேதங்கள்: 5. நந்தர் வெறுக்கை. 14 வரைவாயும்பர். 17. குத்திய புகழொடு.