பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


280 - அகநானூறு - மணிமிடை பவளம்

அன்னையும் நம்மேல் விருப்பமுற்ற முகத்தினள் ஆயினள், ஊர்க்கண் எழுந்த அலரோ, பொற்பூவினை அணிந்த கொங்கர்களை ஒட்டி, அவர் தம் நாடுகள் பலவற்றையும் அகப்படுத்திய பசும்பூண் பாண்டியனின் பொன்வளம் மிகுந்த பெருநகரமாகிய கூடலிலே, அவ்வெற்றி காரணமாகக் கொண்டாடிய இனிய இசையோடு கூடிய கொண்டாட்டங் களின் ஆரவாரத்தினுங் காட்டில் பெரிதாயிருக்கின்றது; இவ்விடத்தே, யான் இனிச் சில நாட்கள்கூட உயிரோடு இரேன் போலும்?” எனவெல்லாம், பலவும் நினைந்து துயரத்தில் ஆழாதே.

செல்வதற்கு அரியதான நள்ளிரவு வேளையிலே, வடநாட்டின் கண்ணதாகிய அழகிய பசுக்களைக் கவர்ந்து வருவதற்கு எண்ணிச் சென்று, பகைவரின் போர்முனைகளை எல்லாம் அழித்து, பல மந்தைகளையும் தன் நாட்டிற்கு ஒட்டி வந்தவன் எருமை என்பவன்.

தம்முடைய நெடிய கூப்பீட்டொலியினை அறிந்து, பசுவினம் எல்லாம் ஒன்றாகத் தம்மிடத்தே கூடிவருமாறு செய்யும் சிறப்புடையவர் கோவலர். அசையும் திமிலினையுடைய நல்ல ஏறுகளின் சருச்சரை கொண்ட கழுத்திலே, தொங்கலாகப் பூட்டியுள்ள அழகிய துளையினையுடைய மூங்கிற்குழாயிலே, நிறைந்திருக்குமாறு செய்த செறிவுமிக்க உணவினைக் கொள்பவர் அவர்கள். கூடடம் மிக்கவரான அக்கோலவர்களின் தொழுவாகிய அறையினைக் கவர்ந்தும், கன்றுகளையுடைய பெரிய ஆனிரைகளை மன்றுகள் நிறையுமாறு ஒட்டிக் கைப்பற்றிக் கொண்டும் வருபவன் அவன். ஒப்பற்ற வன்மையுடைய தோளினனான, வடுகரின் பெருமானாகிய, பெரும் புகழினையுடைய அந்த எருமை என்பவனின் நல்ல நாட்டினிடத்தே உள்ளதாகிய, அயிரியாற்றினைக் கடந்தும் சென்றவர் நம் தலைவர் என்றாலும்,

மூங்கில் போன்ற தோளினையும், குரும்பை போன்ற மென்மையான முலைகளையும், அரும்பியிருக்கும் தேமல் களையும், இடையின் அழகையும் மறைத்ததாகத் தாழ்ந்து தொங்கும் தழைத்த கரிய கூந்தலினையும் உடையவள் நீ. நின்னுடைய, மாகமாகிய விசும்பிலே பொட்டிட்ட திங்களைப் போல விளங்கும் அழகிய முகத்திலே தோன்றிய, ஒள்ளிய மத்தகமணி அமைந்த, விளங்குகின்ற குழையோடு பொருதுகின்ற கலங்கிய நோக்கினை, அவர் மறந்துவிடாது என்றும் நினைவிற் கொண்டிருப்பவரே யாவர்; (ஆகவே, விரைந்து வருவர்; நீயும் கலங்காதே என்றனள்)