பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/302

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 287
 

வெறுத்தது. ஒலிசெய்யும் பரற்கற்களின் வழியாகச் சென்றது. அகன்ற நீர்துறைக் கண்ணே திறந்த வாய் நிறையுமாறு பனங்கள்ளினை உண்பவர் சிந்திய ஒழுக்கினை உண்டது. அந்தமயக்கத்துடன் செல்லும் தள்ளாடிய நடையினையும் உடைய தாயிற்று. இனிய பெரிய வயல்களை உழப்பிக்கொண்டு, அதன் அயலதாகிய ஆம்பலின் மெல்லிய இலைகளுக்குள்ளே சென்று, முடிவிலே ஒடுங்கிக் கிடந்தது. அத்தகைய தன்மையுடைய ஊருக்கு உரியவனே!

ஏதும் பொய்யாகக் கூறாதே! நின்னுடைய மாயம் எல்லாம் யான் அறிவேன். அது, தெளிவாக வெளிப்பட்ட செய்தியினை நீதான் அறியமாட்டாய்.

நேற்று, மையுண்ட எழில்விளங்கும் கண்களையுடைய பரத்தையுடன், வையையின் அழகுபொருந்திய புதுப் புனலிலே, உரிமையுடன் நீ கூடி நீர்விளையாடி இன்புற்றனை. அதனைப் பரத்தையின் தோழிமார் மறைக்கவும் முயன்றனர். எனினும், அது அவரால் மறைக்கவும் முடியாமற்போய், ஊரிலே மிகவும் பழியாகவும் ஆகிவிட்டது.

தொன்மையான புகழ் நிறைந்த, அழகு விளங்கும் பலவகைப் பூக்கள் நிரம்பிய வயல்களையும், கரும்பு நிறைந்த தோட்டங்களையும் உடையது, சிறப்பு வாய்ந்த கள்ளுர், அதன் கண்,

அழகிய நெற்றியினையுடைய இளையவள் ஒருத்தியின் அழகிய நலத்தினைக் களவிலே உண்டனன் ஒருவன். பின், அவளைக் கைவிட்டனன். அத்துடன், அந்த அறனில்லாத தன்மையின், “இவளை யான் பார்த்தும் அறியேன்” என்று, நீதியில்லாத கொடிய சூளினையும் சான்றோர்.பால் உரைத்தனன். அவையத்தார், அதன் உண்மையை அறிந்த சான்றினர்களை வினவி, அவனுடைய பொய்த்தன்மையை நன்கு உணர்ந்தனர்.

தளிர்கள் அடர்ந்த பெரிய மரத்தின் முக்கவரான கிளையிலே அவனை இறுக்கக் கட்டிவைத்து, நீற்றினையும் அவன் தலையிலே பெய்து, அவனை ஒறுத்தனர், அப்போது, சிறப்பு மிகுந்த அந்த அவையின் கண்ணே, அவனைக் குறித்து எழுந்த இகழ்ச்சி ஆரவாரத்தினும், நின்னைப்பற்றி எழுந்த அலரின் ஆரவாரம் பெரிதாயிற்றே!

என்று, தோழி தலைமகற்கு வாயின் மறுத்துக் கூறினாள் என்க.