பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 325
 


         முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
         அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரள் நீடி,
         ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை,
         ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
         புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம் 15

         நிலவைர எல்லாம் நிழற்றி,
         அலர் அரும்பு ஊழ்ப்பவும், வாரா தோரே.

மிகவும் மிகுதியாகி, முடிவின் எல்லை இதுதான் என்று அறியவும் இயலாத தன்மையுடனேயே வாடைக் காற்றும் வந்தது. அந்தக் காற்றுடனே கூடி, முலையிடைத் தோன்றிய நோயும் இளமுளை வளர்வதுபோல நாளுக்குநாள் வளரலாயிற்று. தளர்வுள்ள நெஞ்சத்திடத்தே தோன்றிய வருத்தத்தின் காரணமாக, அந்த முளை, திரண்ட அடிமரத்தையுடைய மரமாகவும் வளர்ந்தது. ஊரோர் எடுத்த அம்பல் அதன் அழகீய கிளைகளாகப் பரந்து விளங்கிற்று. அமையாத காதல் என்னும் ஒளியினையுடைய தளிர்களைப் பரப்பிக் கொண்டதாகப், புலவர்கள் புகழ்ந்துரைத்த நாணமும் இல்லாது போன ஒரு பெருமரமாகவும் அது ஆகிவிட்டது. நிலத்தின் எல்லை எங்கணுமே கவிழ்ந்து நிழல்செய்து, அலராகிய அரும்புகளைத் தோன்றச் செய்தும் விட்டது. இந்நிலையினும்கூட, அவர் நம்மிடத்தே வாராதவராயினர்.

ஆகாயத்தை நோக்கி வேகமாக எறிந்த கூதாளி மாலையினைப்போல, பசிய காலினையுடைய குருகுகள் வரிசையிட்டு வளைவுடனே பறந்து வருகின்றன. அவை வளமிகுந்த நீர்நிலைக்கண்ணே மிகுதியான ஆரவாரத்துடனே வந்து, அங்குள்ள மலர்களுடன் கலந்து பரவி அமர்ந்தன. விளைநிலங்கள், கதிர்களை ஈன்ற தம்முடைய புனிற்றுவேளை கழிந்தவையாகத் தோன்றும, புதிதாக வருதலையுடைய பனிக்காலமும் வந்தது. அதனாலே. நம் நலத்தினைக் கவர்ந்து கொள்ளும் பசலைநோயும் படர்ந்து நம்மை வருத்துகின்றது. இருந்தும், நம் துயரத்தை அவர் அறியமாட்டாரோ?

அவர் அறிந்திருந்தாலும், நம்முடைய உள்ளத்தைப் போன்ற மென்மையான தன்மை அவரிடத்தேயும் இல்லாததனால், நம்முடைய இந்த உலகத்தையே நினையாதிருக்கின்றனரோ? யான் என்னவென்று உணர்ந்து ஆற்றியிருப்பேன்?

என்று? பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொன்னாள் என்க.