பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/346

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் . புலியூர்க்கேசிகன் 331 -

அறிந்து கொள்ளுதலுக்கு அஞ்சிக், காவலுடைய வீட்டினுள்ளே எவரும் அறியாமற் புகுகின்ற கள்வனைப் போல மெல்ல மெல்லப் பதித்ததாக நடந்து ஒதுங்கும். அத்தகைய நீர்த்துறை உரியவனாகிய ஊரனோடு நமக்கு இனித் தொடர்பும் ஆவது ஆகுக! இனி, நாணம் என்பதும் ஒன்று நமக்கு உளதோ?

அவ்வூரன் எம்முடைய சேரியிடத்தேயே தங்குதற்கு வருவானாக. செவ்வரி பொருந்திய மையுண்ட கண்களையுடைய அவன் மனைவியே பார்த்துக் கொண்டிருக்க, அவனுடைய ம்ாலையினையும் ஆடையையும் பற்றிக் கொள்வேனாக ஆரியர்களின் பிடியானது தான் பழக்கம் செய்துகொண்டு தருகின்ற பெரிய களிற்றியானையைப் போல, என் தோளே கட்டுத்தறியாகக் கொண்டு, என் கூந்தலாகிய கயிற்றினாலே கட்டி, அவனுடைய மார்பினைச் சிறைப்படுத்துவேனாக! அங்ஙனம் யான் செய்யாது போனால்,

என் தாய் பேணி வளர்த்த என் அழகெல்லாம், பொருளார்வம் கொண்டு இரந்தவர்களுக்கு ஈயாமல் சேர்த்து வைத்த கருமியின் பொருளைப் போல, வெளிப்பட்டுப்புகழுடன் எங்கும் பரவாததாகி, வருந்திக் கிடந்தே அழிவதாக!

என்று, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொன்னாள் என்க. . . .

சொற்பொருள்: 1. நீள் இரும் பொய்கை நெடிதான பெரிய பொய்கை, 4. கடியிலம் - காவல் உடைய இல்லம். 5. சாஅய் ஒதுங்கும் - அக்கம் பக்கம் பார்த்துத் தளர்ந்து நடக்கும். 9.தார் - விசேடமாக அணிவது போகத்திற்கு உரிய மாலை என்பர். தானை ஆடை மேலாடையுமாம் 10. பயின்று பழகி தருஉம் - கொண்டு தரும்.15. கடி கொள்ளல். சிறைப்படுத்துதல்.

விளக்கம்: “நலன் கருமியின் பொருள் போலப் பரந்து வெளிப்படாதாகி வருந்துக’ என்றது, அவன் கொடுத்தலில னாதலால் எவரும் மதித்துப் போற்றாதவாறு போலத், தன் நலனும் போற்றுவாரற்றுப் பயனின்றி அழிக என்றனளாகும்.

உள்ளுறை: நாரை, வாளைப் போத்தினைத், தான் வருவதை அது அறியாதவாறு மெல்ல அடியிட்டு நடந்து கவர்ந்து உண்ணும் ஊரன் என்றது, தானும் அவனுணராதேயே அவனைத் திடுமெனத் தோன்றி மயக்கி அடிமைகொள்ளும் வல்லமை உடையவள் எனச் செருக்குடன் கூறியதாகும்.