பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/397

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


382 அகநானூறு - மணிமிடை பவளம்

விற்றலையும், காமநோய் படுசேற்றுள் அகப்பட்ட வண்டியை இழுக்கமாட்டாது வருந்தி வெய்ய உயிர்க்கும் பகட்டின் தன்மைபோல வருத்தும் எனவும் இவர் கூறியுள்ளார். 280ஆவது பாடலுள், ‘சிறுமியர் கடற்கரையிலே நண்டுகளை வெருட்டி விளையாடும் திறமும், எப்பொருள் கொடுத்தும் பெறமுடியாத பரதவர் மகளை அவள் தந்தைக்குத் தொண்டு செய்தாவது பெறுவோமா என நினைக்கும் காதலனின் உள்ளமும் சிறப்பாக விளங்குவனவாகும்.

ஆமூர்க் கவுதமன் சாதேவனார்(159)

ஊர்ப்பெயர் ஆவூர் எனவும் சில பிரதிகளில் காணப்பெறும். நற்றிணை 264ஆவது செய்யுளைச் செய்தவரான ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரும் இவரும் ஒருவரே எனவும் கொள்வர். ‘காவிதி’ என்பது வேளாளருள் உழுவித்து உண்ணும் நிலையினருள் சிலருக்கு அரசரால் தரப்படுவதோர் பட்டமாதலின், இவரை வேளாளர் என்பர் சிலர். ஆமூர்’ சேரநாட்டுக் குறும்பொறை மலைக்குக் கீழ்ப்பாலுள்ளது. ஆதலின், இவர் ஆமூரைச் சேர்ந்த கவுதம் கோத்திரத்து அந்தணர் எனவும் கொள்வர். சாதேவனார் என்ற வடசொற்பெயரும், கவுதமன் என்ற அடையும் இதனையே வலியுறுத்தும் என்பர் வேறுசிலர். இந்நூலுள் இவர் பாடிய பாடல் பாலைத்திணையைச் சார்ந்தது. சேண்விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் ஆண்டமைந்து உறையுநர் அல்லர் எனத் தோழி தலைமகளைத் தேறுதல் கூறுவதாக வரும் இவர் சொற்கள், ஆமூரின் வளமையைக் காட்டுவனவாகும். பாரதத்துட் பயின்றுவரும் சகாதேவன் என்ற பெயருடன் இவர் பெயரையும் நோக்க, இதுவும் வழக்காற்றிலிருந்து பழம்பெயராதலைக் காணலாம்.

ஆலம்பேரிச்சாத்தனார் (143, 175)

மதுரையைச் சார்ந்த ஆருலவிய நாட்டு ஆலம்பேரி என்னும் ஊரினர். நெய்தலையும் பாலையையும் சிறந்த முறையிலே பாடியவர். கடலனது விளங்கில் என்னும் ஊரும், வானவன் மறவன் பிட்டனது குதிரைமலை'யும், நெடுஞ்செழியன் வென்ற தலையாலங் கானத்துப் போரும், நேமியன்’ என்பானும் இவராற் பாடப் பெற்றிருப்பக் காணலாம். இந்நூலினுள், 143ஆவது பாடலிலே சேரர் படைத்தலைவனாகிய பிட்டனின் குதிரைமலைச் சிறப்பும், 175ஆவது பாடலுள் ‘ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த வேலின் பெருக்கினையுடைய செழியனின் சிறப்பும் கூறப்பட்டுள்ளன. இரண்டும் பாலைத்திணையைச் சார்ந்தவை. நற்றிணையுள் நான்கு செய்யுட்கள் இவர் பாடியனவாகக் காணப்படும். *