பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/400

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 385
 

நிலையினையும், அது கேட்டு அவனது பரத்தை கொள்ளும் ஊடலையும் நயமுடன் கூறுகின்றனர்.

இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் (279)

‘ஒல்லை’ என்ற சொல் இவர் ஒல்லையூரினர் எனவும், ‘ஆயன்' என்ற சொல் இவர் ஆயர் மரபின்ராயிருத்தல் கூடும் எனவும், 'இருங்கோன்’ என்ற சொல் இவர் ஒரு குறுநிலத் தலைவராயிருத்தல் கூடும் எனவும் எண்ண இடந்தருகின்றது. ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்டிாரும், ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் என்பாரும் ஒல்லையூரினரே என்பது, இவ்வூர் புலவர் பலருடைய ஊராயிருந்த சிறப்புடையதாதலை உணர்த்தும். 'ஆயன்' என்பதனை நாடு காவலுடையான் எனப் பொருள் கொள்ளுமிடத்து, இருங்கோன் என்பது இருங்கோவேள் என்றாற்போன்று குறுநில மன்னர் பரம்பரையைக் குறிப்பதுமாகலாம். இவர் பாடலாக விளங்குவது மணிமிடைபவளத்து இப்பாடல் ஒன்றேயாகும்.இப்பாட்டினுள், இருங்கோக் கண்ணனார் என்ற பாடபேதமும் உரைக்கப்படும். ‘புனல் தெளி காலையும் மதுகையளாகி அடைதரும் மனைவியின் காதற் பாசம்' இப்பாடலுள் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.


இறங்குடிக் குன்ற நாடன் (215)

இவர் செய்ததாகக் காணப்படுவது இச்செய்யுள் ஒன்றேயாகும். குன்ற நாடன் என்ற சொல்லினாலே மலைநாட்டவர் என்று கருதலாம். இறங்குகுடி என்றது குடிப்பெயராதலும் பொருந்தும். பாலைத்திணைச் செய்யுளாக இவர் செய்யுள் விளங்குவதும்,இவர் பாலைப்பட்ட மலைப்பதியினராதலை வலியுறுத்தும். ‘கடுத்தது பிழைக்குவதாயின் கொடுத்த கைவிரல் கவ்வும் கல்லாக்காட்சிக் கொடுமரம் பிடித்த கோடா வன்கண் வடிநவில் அம்பின் ஏவல் ஆடவர்’ என்று பாலைநிலத்து ஆடவரை இவர் குறிக்கும் பகுதி, மிகவும் நுட்பமானதாகும். ‘வேறு பன்மொழிய தேஎம் முன்னி என்பது, தமிழ் இளைஞர்கள் வடவிந்தியாவின் கண்ணுள்ள பிற மொழி வழங்கும் நாடுகள் பலவற்றினுஞ் சென்று வாணிகம் செய்து வந்தனர் என்பதைக் காட்டுவதாகும்.

ஈழத்துப் பூதன் தேவனார் (231)

மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் எனவும் இவர் பெயர் வழங்கப்படும். ஈழ நாட்டினரான இவர் மதுரைக்கண் தங்கிச் சங்கப் புலவருள் ஒருவராக விளங்கினர் எனலாம். இவராற் பாடப்பெற்றோன் பசும்பூண் பாண்டியன் என்பவன். ‘பூதன் தேவனார்’ என்னும் பெயர், இவர் தெய்வப் பெயர் பெற்றவர்.