பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/403

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
388
அகநானூறு - மணிமிடை பவளம்
 

பாடல்கள் பெரும்பகுதியும் பாலைத்திணையைச் சார்ந்தவையே. இது அவரது குடியினர் வாழ்ந்த மலையகத்துப் பாலைப் பகுதியை ஒட்டியமைந்ததுமாகலாம்.'அன்பும் மடனும் சாயலும் இயல்பும் என்பு நெகிழ்க்குங் கிளவியும்' உடையவளே சிறந்த பெண்; மகளிர் பிறைதொழுஉம் இயல்பினர்; நெகிழா மென்பிணி வீங்கிய கை, சிறிது அவிழினும் உயவும் ஆய்மடத் தகுவியாக விளங்கும் மனைவி; பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி 'நல்ல கூறு’ என நடுங்கும் மனைவி; வைகுநிலை மதியம் போலப் புதுக்கவின் இழந்த திருமுகம்; என்றெல்லாம் மிகவும் அருமையான கருத்துக்களை இவர் பாடல்களுள் கண்டு இன்புறலாம்.

எழுஉப் பன்றி நாகன் குமரனார் (138, 240)

இவர் பாடியவாகக் கிடைத்தவை இவ்விரண்டு செய்யுட்கள்தாம். வேட்டுவர் குலத்தினரான எழுஉப்பன்றி நாகன் என்பவரின் குமரனார் இவர் என்பது பெயராற் புலனாகும். 188 ஆவது பாட்டினுள், ‘இருமணி உமிழ்ந்த நாகம் காந்தள் கொழுமடற் புதுப்பூ ஊதும் தும்பியின் நன்னிறங் கண்டு மருள்வதுபோலத் தாயும் களவினாலே பெற்ற மகளின் புதுப்பொலிவு கண்டு மருண்டு, முருகனை வேட்டலிலே மனஞ் செலுத்தினாள் எனவும், இவர் குறிஞ்சியைச் சிறப்பாகப் பாடியுள்ளார். 240 ஆவது செய்யுள் நெய்தல். அதன்கண், நுளையர்மகளிர் கிளையுடன் கூடி, சுறவுக்கோடு நட்டு வருணனுக்குப் பரவுக் கடன் கொடுப்பதைக் குறித்துள்ளார். இதனால் மலைநாடும் கடல்நாடும் நன்கறிந்தவர் இவர் என்பது புலனாகலாம். எழுஉப் பன்றி என்பது ஊராகவோ அன்றிக் குன்றாகவோ கொள்க.

ஐயூர் முடவனார் (216)

அகத்துள் இச்செய்யுள் அன்றியும், குறுந்தொகையுள் மூன்றும், நற்றிணையுள் இரண்டும், புறத்துள் நான்கும் இவர் பாடியவாகக் காணப்படுவன. 'ஐயூர்' பாண்டிய நாட்டின் கண் உள்ளதோர் ஊர். முடவனார் என்பது இவரது உடற்குறை பற்றி வந்த பெயராகலாம். பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய வழுதி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தாமான் தோன்றிக் கோன், ஆதன் எழினி ஆகியோரைப் பாடியவர். ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், கோவூர் கிழார், தாயங் கண்ணனார், மாறோக்கத்து நப்பசலையார் ஆகியோர் காலத்தவர் இவர். இந்நூற் செய்யுளுள் செல்லிக் கோமானான ஆதன் எழினி என்பானைச் சிறப்பித்துள்ளனர்; செல்லி என்பது கோசர்க்குரிய செல்லூர் ஆகும்.