பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/406

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் k 391

என நயமாக உரைத்தது பற்றியே இப்பெயர் பெற்றனர் என்பர். பெரும்பாலும் புலம்பலே இவர் பாடலின்கண் மிகுதியாகப் பயின்று வருவதாகும். அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலையிலே வெற்றிகொண்டு, திதியனின் காவன் மரமாகிய புன்னையை வெட்டினான் என்ற செய்தியினை (அகம் 145)யும், முது குயவர்கள் அம்மன் கோயில் பூசாரிகளாக விளங்குவதை நற்றிணைச் செய்யுளிலும் (283) இவர் சொல்லியிருக்கின்றனர்.

கருவூர்க் கள்ளம் பாளனார் (180, 263)

இவர் பெயர் கண்ணம் பாணனார் எனவும் காணப்படுவ துண்டு. இவ்விரு பாடல்கள் அன்றியும், நற்றிணை 148ஆவது செய்யுளும் இவர் செய்ததாகக் காணப்படும். இக் கருவூர் சேரநாட்டுத் தலைநகராக விளங்கிய கருவூர் ஆகும். இந்நூலினுள், தலைமகளைக் குறைநயப்பத் தோழி கூறியதாக வரும் நெய்தல் திணைச் செய்யுள் (180) மிகவும் நயம் உடையதாகும். 263ஆவது செய்யுளிற் சேரமான் கோக்கோதை யினையும், அவனுடைய வஞ்சிமூதுரின் வளத்தையும் இவர் பாடியுள்ளனர். இச் சேரமானைப் பொய்கையாரும் பாடியுள்ளனர். ஆகவே அவர் காலத்து இருந்தவர் இவரும் ஆகலாம்.

கருவூர்க் கலிங்கத்தார் (183)

இந்த ஒரு செய்யுளே இவர் பெயராற் சங்க நூல்களுள் காணப்படுவது. கருவூர் இவர் ஊர் எனவும், கலிங்கத்தார் என்ற சொல்லால் இவர் ஆடை நெய்யும் தொழிலினராயிருத்தல் கூடுமெனவும் நாம் கருதலாம். இச் செய்யுளில், மழை மேகங்கள் சூல்கொண்ட பிடியானைகள் போல உலவும் என இவர் உவமிக்கும் திறம் மிகவும் இன்புறற் பாலதாகும்.

கருவூர் நன்மார்பன் (277)

இவர் பாடியதாகக் காணப்படுவது இச் செய்யுள் ஒன்றே யாகும். நன் மார்பன் என்ற பெயர் இவருடைய சிறந்த மார்பின் ஆற்றல் பற்றியோ வனப்புப் பற்றியோ அமைந்ததாகலாம். மேலும், இவர்அரச மரபினராயிருத்தல் கூடுமெனவும் கருதலாம். இந்நூற் செய்யுளுள், தயிர் கடையும் ஒலியினைப் புலியின் முழக்கத்திற்கும், பன்றி மயிரினைப் பனையின் செறும்புக்கும், முருக்கின் பூங்கொத்தினைக் கோழியின் எருத்துச் சிவந்த தசைக்கும் உவமித்துள்ளனர். காதலனைப் பிரிந்த காதலியின் நெற்றியின் ஒளி குறைந்ததற்குப் பகலிலே ஒளி குன்றித் தோன்றும் நிலவினைக் கூறியதும் இவரது சிறந்த உவமையாகும்.