பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/417

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
402
அகநானூறு - மணிமிடை பவளம்
 

நற்றிணையுள் நான்கும், புறத்துள் ஒன்றுமாக இவர் பாடியவை 12 செய்யுட்கள். ‘சிறுகரு நெய்தற் கண்போல் மாமலர்’ என உவமையைக் கையாண்டுள்ளனர். பெண் மகளிர் புறவுச் சேவலைக் குறும்பறை பயிற்றி விளையாடுவதையும்; நெய்தற்கண் மகளிர் விளையாடலையும்; இரவுக்குறியிடத்து வந்த காதலனை, அன்னை முருகனென மயங்கி வழிபட்டதும் போன்ற பல சுவையான செய்திகளை இப் பாடல்களுள் காணலாம்.

மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார் (207)

சேந்தன் தந்தை பெயர்: பூதன் இவருடைய இயற்பெயர். மதுரைப் பாண்டிய மன்னர்களிடத்தே அவர்கள் ஆணைகளை எழுதும் தொழிலைச் செய்து வந்தவர் இவர். சேகம்பூதனார் எனவும் சில ஏடுகளில் காணப்படும். இவர் பாடியனவாக நற்றிணையுள் இரண்டு பாடல்களும், குறுந்தொகையுள் மூன்றும், அகத்துள் இரண்டுமாக ஏழு பாடல்கள் காணப்படும். இச்செய்யுளில் மகள் உடன்போக்கிற் செல்ல, அதனால் கவலையுற்ற தாயின் மனநிலையினை மிகவும் உருக்கமாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் (170)

மதுரைப் புலவர்களுள் இவரும் ஒருவர்.கள்ளில் என்பது ஒர் ஊர்; பொன்னேரிக்குத் தென்மேற்கே 12 மைல். கடையத்தன் என்பது இவர் மேற்கொண்டதொரு தொழிலாகலாம். இவர் பாடியவாகக் கிடைத்தவை இச்செய்யுளும், புறநானூற்று 36ஆவது செய்யுளும் ஆகும்.'அவன் எம் இறைவன், யாம் அவன் பாணர்' எனக் கூறுவதனால் இவர் பாணர் மரபினர் எனக் கருதுவதும் கூடும். இச்செய்யுளுள்,தலைவி அலவனிடம் தன் காமநோயை உரைத்துத் தலைவனிடம் சொல்லல் வேண்டும் எனக் கேட்பதாக அமைந்த கருத்து நயமுடையதாகும்.

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் (204)

கொல்லியாண்ட வல்விலோரியைச் சிறப்பித்து நற்றிணை யுள் (52) பாடியவர் நப்பாலத்தனார் என்பவர்; அவர் வேறு; இவர் வேறு. அந்த வேறுபாட்டினைக் குறிக்கவே, காமக்கணி என்ற அடைகொடுத்து இவர் பெயர் அமைவ தாயிற்று எனலாம். இப் பாடலுள் வாணனுடைய சிறுகுடியின் வளத்தைக் கூறியுள்ளனர். 'காமக்கணி' என்பது இவர் வானநூல் பயிற்சி உடையவராயிருந்தனர் என்பதனையும் காட்டும்.