பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/418

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் - புலியூர்க்கேசிகன் 403

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

(134, 229)

மதுரைப் பெரும் புலவர்களுள் இவரும் ஒருவர். தானிய வணிகராக விளங்கினமையால் கூலவாணிகன் எனப் பெற்றனர். சீத்தலைச் சாத்தனார் என்பதில் சீத்தலை என்பது ஊரைக் குறித்தது எனவும், உறுப்புப்பற்றியது எனவும் இருவேறாக ஆய்வாளர் கருதுவர். நற்றிணையுள் மூன்றும், அகத்துள் ஐந்தும், புறநானூற்றுள் ஒன்றும், குறுந்தொகையுள் ஒன்றுமாக இவர் பாடியவையாகக் காணப்படுவன பத்துச்செய்யுட்கள். இவையன்றியும் மணிமேகலைக் காப்பியத்தினை இயற்றியவர். இவரே எனவும் சான்றோர் கூறுவர். அங்ஙனமாயின், இவரது சமயம் பெளத்தம் எனக் கொள்ளலாம். இந்நூற் பாடல்களுள், ‘குவிமுகை வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த ஒழிகுலை யன்ன திரிமருப்பு’ என மானேற்றின் கொம்பினையும் ‘பகல்செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன் அகல்வாய் வானத்து ஆழி போழ்ந்தென, நீரற வறந்த நிரம்பா நீளிடை’ எனக், கோடையின் வெம்மையினால் நிலம் வெடித்துக் கிடப்பதனையும் நயமுடன் கூறியுள்ளனர். - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் (256)

இவரும் மதுரையிலிருந்த புலவர்களுள் ஒருவரேயாவர். ஆரியக் கூத்து தமிழ்க் கூதது என்ற இருவகையான கூத்துக்களுள், இவர் தமிழ்க் கூததில் வல்லவராக விளங்கியவர். மள்ளனார் இயற்பெயர் எனவும் கடுவன் என்பது சிறப்புப் பெயராகவும் கொள்வர். அகநானூற்றுள் மூன்றும், குறுந்தொகையுள் ஒன்றுமாக இவர் பாடியவாகக் கிடைத்தவை நான்கு பாடல்களாகும். இந்நூலின் இப்பாடலுள்ள ஓர் இளம் பெண்ணைக் காதலித்துப், பின் கைவிட்ட பொய்மையாளன் ஒருவனை, ஊர் மன்றத்தார் நீறு தலைப்பெய்து தண்டித்த செய்தியை இவர் கூறியுள்ளார். மேலும், இராமாயண சம்பவம் ஒன்றும் இவரால் அகநானூற்று எழுபதாவது பாடலுள் கூறப் பட்டிருக்கின்றது. மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார் (164)

மதுரைப் புலவருள் ஒருவராகவும், தமிழ்க் கூத்திலே வல்லவராகவும் விளங்கியவர் இவர். இயற்பெயர் தேவனார் எனவும், நாகன் என்பது தந்தையார் பெயராகலாம் எனவும் கொள்ளலாம். சங்கத்தொகை நூற்களுள், இவர் பாடியது இவ் வொரே பாடலேயாகும். பாசறைக்கண் இருந்த தலைமகன் ஒருவன் தன் காதலியை நினைந்து தன் நெஞ்சிற்குக் கூறிய துறையமையச் சுவையுடன் பாடல் விளங்குகிறது. -