பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/428

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 413
 

காவிரி அவனை ஆதிமந்தியிடம் இருந்து கவர்ந்து சென்றதாகவும், ஆதிமந்தியானவள் கதறிப் புலம்பித் தேடிச் செல்ல மருதி என்ற கடல் தெய்வம் அவனை அவளுக்குக் காட்டித் தந்தது என்பதாகவும், 222ஆவது செய்யுளில் உரைக்கப்பட்டிருக்கின்றது. 'ஆட்டன் அத்தியைக் காணிரோ?' என ஆதிமந்தி, நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் எல்லாம் கலங்கிய கண்ணளாகத் தேடிச்சென்ற செய்தி 236ஆவது செய்யுளிற் கூறப்பட்டிருக்கின்றது. இனிச் சிலப்பதிகாரமோ, இவனைச் ச்ேரமன்னன் எனவும்,ஆதிமந்தியைக் கரிகால் வளவன் மகள் எனவும் கூறும்.

ஆதன் எழினி(216)

இவன் கோசர் குடியினருள் ஒருவனாவான். சிறந்த புது வருவாயினையுடையதும் கீழைக் கடறிகரையோரத்து அந்நாளிலே இருந்ததுமான செல்லூர் கோசர்களுக்கு உரியதாயிருந்தது. அவர்களுடைய மன்னனாகத் திகழ்ந்தவன் இவன். இவன் வேலெறிவதிலே வல்லவன் என்பதும், யானைகளையும் வேலெறிந்து கொல்லும் திறன் உடையவன் என்பதும் ஐயூர் முடவனாரால் இப்பாடலுள் சொல்லப்பட்டது. மேலும், இவன் நாட்டு வளத்தைக், 'கடலாடு மகளிர் கொய்த ஞாழலும், கழனி உழவர் குற்ற குவளையும், கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு, பல்லிளங்கோசர் கண்ணி அயரும், மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்’ என வருணிப்பார் ஐயூர் முடவனார்.

ஆதி மந்தியார் (135,222,226)

சோழ நாட்டவரான இவ்வம்மை, ஆடல் வல்லோனான ஆட்டனத்தியின் காதல் மனைவியார் ஆவர். அவன் கழாஅர்ப் பெருந்துறையிலே காவிரிப் புதுப்புனலோடு, செல்ல, நாடெங்கும் கதறிக்கதறி அவனைத் தேடிச்சென்று, இறுதியிற் காவிரி முன்துறையிலே மருதி என்னும் கடல் தெய்வம் கணவனைக் காட்ட அடைந்து இன்புற்றவர். 135 - ஆவது செய்யுளில் ஆதிமந்திகொண்ட பெருவருத்தம் பரணரால் உரைக்கப்பட்டுள்ளது. 222, 236ஆம் செய்யுட்களும் அந்தத் துயரமான சம்பவத்தைப் பரணர் வாய்மொழியாக நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். காதலனைப் பிரிந்து வருந்திய வெள்ளிவீதியார் என்னும் புலவரும், ‘ஆதி மந்திபோலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொலலோ' என இவர் வருத்தத்தைத் தன் துயருக்கு ஒப்பிட்டுக் கூறுவர் (அகம் 55) இவரை, 'மன்னன் கரிகால் வளவன் மகள்’ எனச் சிலப்பதிகாரம் கூறும்.