பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 அகநானூறு - மணிமிடை பவளம்

மழையானது தப்பாமல் வாய்த்தமையாலே, நிறைந்த சூலையுடைய கரிய மேகங்கள், கார்காலத்தின் பயன் விளையப் பெய்ததாகக், காடுகள் அழகுற்று, நீலமணியைப் போலும் காயாம்பூவின் அழகிய மலர்களின் இடையிடையே, சிவந்த முதுகினையுடைய இந்திரகோபப் பூச்சி பரவி ஊர்தலினாலும், நல்ல பல முல்லைமலர்கள் கழலின் கொடிக்கண் தாவுதலி னாலேயும், சித்திரம் எழுத வல்லவனின் செய்கையை ஒத்துத் தோன்றும், சிவந்த நிலத்தையுடைய முல்லைநில வழியிலே,

தாவிச் செல்லுதலினாலே தாளம் விளங்குகின்ற நாட்டியத் தொழில் பயின்ற மனஞ்செருக்கிய குதிரையினுடைய, தாவும் இணையொத்த கால்களால் மெல்ல நடக்கும்படியாகச், சாட்டையால் அடித்தலை மறந்து, வலவனே! தேரைச் செலுத்துவாயாக! -

ஏனெனில்,

முறையுற்று மடலுதிர்ந்த குவிந்த மொட்டாகிய, பெரிய பூ ஒழிந்த வாழையின் குலைபோலும் முறுக்குண்ட கொம்பினையுடைய ஏற்றுமானுடன், புணரும் நிலையிலுள்ள திரண்ட கால்களையுடைய அழகிய பிணைமான், விரைந்து செல்லும் குதிரை பூண்ட தேரின் ஒலியைக் கேட்பின், அம் மருட்சியினாலே நடுநாளின்கண் முயக்கம் உண்டாதலும் கூடுமோ? இல்லையாதலின் என்க.

என்று, வினைமுற்றி மீண்ட தைைலமகன் தேர்ப்பாகற்கு உரைத்ததாகக் கொள்க.

சொற்பொருள் : 1. வானம் வாய்ப்ப - மழை தப்பாமல். 2. கமஞ்சூல் - நிறைந்த சூல். கார் பயந்து இறுத்தல் - கார் காலத்தின் பயன் விளையப் பெய்தல். கார் பயந்து இறுத்தென - கார்காலத்தின் பயன் விளையப் பெய்ததாக, 3. மணி - நீலமணி. பூவை அணிமலர் - காயாம்பூவின் அழகிய மலர். 4. மூதாய் - இந்திரகோபப் பூச்சி. 5 வீ - மலர் கழல் தாய் - கழலின் கொடிக் கண் வீழ்தலினாலே. 6. புறவு - முல்லை நிலம். 7. கலிமா - மனஞ்செருக்கிய குதிரை. பாணி - தாளம்.10. வான் பூ - பெரிய பூ ஊழுறுபு - முறையுற்று. 1. ஏறு ஏற்றுமான். 12. காமர் - அழகு.

விளக்கம்: தலைமகளைக் கூடுதற்கு விரைகின்றவன் தலைவன். ஆதலால், புணரும் நிலையிலுள்ள மானினங்களின் பிரிவுக்கு அஞ்சினான் என்று கொள்க. எனவே, தலைவியிடத்து அவனுக்குள்ள காதற்பெருக்கம் உணரப்படும். இடிமறந்து’ என்பதற்குத் தாற்று முள்ளாற் குத்துதலை மறந்து என்றும் பொருள் கூறலாம்.