பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 அகநானூறு - மணிமிடை பவளம்

விளக்கம் : வசையில் போராவது, படைமடம் படாமைப் பெரும் போர் ஆகும்; படைமடம் படின் வருவது வசையாம்; ஆதலின், பிட்டனை வசையில் வெம்போர் வானவன் மறவன்’ என்றனர். வானவன் சேரன்.

பாடபேதங்கள் : 2. கவின் அழியக் கடுங்கதிர். 4. ஆடுபல் அகலிலை 6. முளரியிற்பிறந் 8. வெம்முனை அஞ்சுரம்.

144. புலம்பினாலும் மகிழ்வாள்!

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழலார் மகனார். திணை: முல்லை. துறை: வினை முற்றிய தலைமகன், தன் நெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்குச் சொல்லியது.

(தலைமகன், போர்வினை மேற்கொண்டவனாகத், தன்னுடைய தலைவியைப் பிரிந்து சென்றிருப்பவன், தன்னுடைய பிரிவின் துயரத்தினால் தன்னுடைய காதலி எப்படி வாடி மெலிவாள்; எப்படித் தன் தோழியிடம் மனம் நொந்து தன்னுடைய கொடுமையை கூறிகூறி வருந்துவாள் என்றெல்லாம் எண்ணுகின்றான். அவனுக்கு ஒர் அமைதி. தான் போரில் வென்று பெற்ற செல்வத்தைப் பற்றிச் சுற்றத்தார்கள் புகழ்ந்து உரைக்க கேட்டபோது, அவள் எல்லாம் மறந்து தன்னைத் தழுவி மகிழ்ந்தது போல் மகிழ்வாளல்லவோ என்று நினைக்கிறான்.தன் நெஞ்சினை விளித்துக் கூறுவதுபோலப் பாகனுக்குத் தன் ஆற்றாமையை உரைத்துத் தேரை விரைந்து செலுத்தத் தூண்டுகின்றான்)

“வருதும் என்ற நாளும் பொய்த்தன; அரியேர் உண்கண் நீரும் நில்லா; தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், 5

அருள்கண் மாறலோ மாறுக-அந்தில் அறன்அஞ் சலரே! ஆயிழை! நமர் எனச் சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், பனிபடு நறுந்தார் குழைய, நம்மொடு, துனிதீர் முயக்கம் பெற்றோள் போல 10

உவக்குநள்-வாழிய, நெஞ்சே!-விசும்பின் ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறைப், பார்வேட்டு எழுந்த மள்ளர் கையதை கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி, 15