பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 57

வேர்முழுது உலறி நின்ற புழற்கால், தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், வற்றல் மரத்த பொன்தலை ஓதி வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு 5 ஆளில் அத்தத்து, அளியள் அவனொடுவாள்வரி பொருத புண்கூர் யானை புகர்சிதை முகத்த குருதி வார. உயர்சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும் அருஞ்சுரம் இறந்தனள் என்ப-பெருஞ்சீர் 10 அன்னி குறுக்கைப் பறந்தலைத், திதியன் தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய நன்னர் மெல்லினர்ப் புன்னை போலக், கடுநவைப் படீஇயர் மாதோ-களி மயில் குஞ்சரக் குரல குருகோடு ஆலும், 15 துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக், கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற் சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது, எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம், 20 ‘எனக்கு உரித்து’ என்னாள், நின்ற என் அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே!

வேர் முதலாக முழுவதுமே முற்றவும் காய்ந்துபோய் நிற்கும், துளைகளிலே சிள்வீடு என்னும் வண்டுகள் இருந்து கொண்டு தேரின் மணியோசைபோல ஒலிமுழங்கிக் கொண்டிருக்கும், வற்றல் மரத்திலுள்ள பொன்னிறம் வாய்ந்த தலையையுடைய ஒந்தியானது, வெயிலால் அழகு இழந்து போன ஊர்களிலுள்ள வெண்மையான ஞெமை மரங்களையுடைய அகன்ற காட்டிலே, தான், கோடையின் வெம்மையால் வருத்தம் கொள்ளுதலால் மெல்லெனத் தாவிக் கொண்டிருக்கும், ஆட்கள் எவரும் செல்லுதல் இல்லாத வழியிலே, வாள்போன்ற கோடுகளை யுடைய புலியுடன் போரிட்டுப் புண்பட்ட யானையானது, புள்ளிகள் சிதைந்த தன் முகத்திலேயிருந்து குருதியானது ஒழுகிக்கொண்டிருக்க, உயர்ந்த உச்சியினையுடைய நெடிய மலைமுகடுகளிலே இடி முடித்து முழங்குவதுபோல முழங்கிக்கொண்டிருக்கும்.