பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 அகநானூறு - மணிமிடை பவளம்

தழுவிக்கொண்டு, தோட்டக்கால்களிலே மேய்ந்துவிட்டுப், பின்னர் வயல்களிலே சென்று தங்கும். அத்தகைய வளமுடைய ஆரவார மகிழ்ச்சி பொருந்திய ஊரனது, ஒலிக்கும் மணியுடைய நெடுந்தேரானது, ஒள்ளிய இழைகள் அணிந்த மகளிர்களுடைய சேரிப்புறத்தே பல நாட்களாகச் சென்று கொண்டிருந்தல் அமையாதானால்: -

மாயஞ் செய்யும் பரத்தமை உடையவனின் வாய்ச் சொற்களை எல்லாம் உண்மையென எம்மைப்போல நம்பி ஏமாந்து, காற்று மோதலினால் அசையும் மழை பெய்யப்பட்ட மலரினின்றும் நீர் சொரிவதுபோலத் தன் கண்களினின்றும் விழும் கண்ணிர் தன் மார்பிலே வழியக் கண்கலங்கி, ஆயத்தாரும் அயலாரும் இஃது என்ன புதுமையோவென மருட்சி கொள்ளத் தாயார் பாதுகாத்துவரும் அழகிய நலத்தினை வேண்டாதவ ளாகிப் போன, விளங்கும்அணிகளையுடைய பரத்தையருள் அவள் யாவளோ? அவள், இரங்கத்தக்கவள் ஆதலாற் பாண, அவள்பால் நீ வாயில் வேண்டிச் செல்க: அஃது உனக்கும் அமையும்; என்று, தலைவி பாணனுக்கு வாயில் மறுத்தாள் என்க.

சொற்பொருள்: 1. முன்பின் - வலிமையுடைய, 2. அண்ணல் - தலைமையான. 2. மலர் - தாமரைமலர். 3. மறுகி - கிடந்து புரண்டு. 4. படப்பை - தோட்டக் கால்கள். 7 இயங்கல் - சென்று வருதல். வயங்குதல் - விளங்குதல், 9. அளியள் - இரங்கத் தக்கவள். 9. பரத்தன் - பரத்தமை உடையவன்.

உள்ளுறை: எருமைக்கடாவானது மாலைவேளை வரை பொய்கையிலே கிடந்துவிட்டுப், பின் எருமையின் இளைய கிடாரியைத் தழுவி, தோட்டக் கால்களிலே மேய்ந்துவிட்டு, வயல்களிலே சென்று உறங்கும். அது போலத் தலைவனும் பரத்தையருடன் நீர் விளையாட்டயர்ந்து, அவர்களைத் தழுவிச் சோலைகளிலே விளையாடிவிட்டு, வயல் போலும் எம் வீட்டிலே தங்குதல் கருதி வருவான் போலும்? அதற்கு யான் இசையேன்” என்றனளாம்

பாடபேதம் :3. மடநாகு 4. படப்பை நண்ணிய 9. பரத்தை

147. தேடிச் செல்வன்!

பாடியவர்: ஒளவையார். திணை: பாலை. துறை: செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு:வெள்ளி வீதியாரின் காதல் மிகுதி.

(தன் காதலன் பிரிந்துபோய்க் குறித்த காலங் கடந்தும் வந்து சேராததனால் மனம் வருந்திய தலைவியின் துயரைத் தணிவிக்க