பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 65

வளர்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 15 பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் - அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 20

சிறிய புல்லிய கறையான் முயன்று எழுப்பிய மிகவும் உயரமான சிவந்த புற்றினுள் மறைந்து கிடக்கும் புற்றாஞ் சோற்றினைப், பெரிய கையினையுடைய கரடியின் பெரிய சுற்ற மானது தின்னும் அதுவும் வெறுத்துவிட்டதானால், புற்கென்ற அரையினையுடைய இருப்பையின் தொளையுடைய வெண்மை யான பூக்களைக் கவர்ந்து உண்ணும். அத்தகைய சுரத்திலே நெடுந்தொலைவு சென்று, மிகவும் அரிதாக ஈட்டத்தக்க உயர்ந்த பொருளை எளிதாக யான் பெற்றாலும்கூட -

சேர மன்னர்களது, ‘சுள்ளி’ எனப்படும் அழகிய பேராற்றினது வெண்மையான நுரைகள் சிதறிப் போகுமாறு, நல்ல தொழில் மாண்புடைய மரக்கலத்திலே யவனர் பொன்னோடு வந்து மிளகோடு திரும்பிப் போகும் நல்ல வளங்கெழுமிய ஊர் முசிறி ஆகும். அதன்கண், ஆரவாரம் எழுமாறு முற்றுகையிட்டு, நடந்த அரிய போரையும் வென்று, அங்குள்ள பொற்பாவையையுங் கவர்ந்து வந்தவன், நெடிய நல்ல யானைப் படையினையும் வெல்லும் போராற்றலையும் உடையவனாகிய செழியன். அவனுடைய கொடியசையும் தெருக்களையுடைய மதுரைமா நகருக்கு மேற்குப்புறத்தே இருப்பது திருப்பரங்குன்றம். பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக்கொடியினை உயர்த்திருப்பது அது. இடையறாத விழாக்களையும் அது உடையது. நெடியோனாகிய முருகனின் அந்தத் திருப்பரங்குன்றின் குண்டு சுனையிலே, வண்டினம் மொய்க்க இதழ் விரிந்த புதிய நீலப்பூவின் ஒத்த மலர்கள் இரண்டின் சேர்க்கையைப் போன்ற, இவளது செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியான கண்கள் தெளிந்த கண்ணிரினைக் கொள்ளுமாறு, நெஞ்சமே! இவளைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக! என்று, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் . .