பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 அகநானூறு - மணிமிடை பவளம்

ஆனால், இவளோ என்றால்,

விளக்கின் ஒளியில்லாமல் தனியாக வீட்டின்கண் இருப் பதற்குக் கூட நடுநடுங்கும் இயல்பினையுடையவள்; நம் ஊர் மன்றத்து மராமரத்திலே கூகையானது வந்தமர்ந்து குழறினாலுங் கூடத் தன் நெஞ்சின் ஊக்கம்அழிந்துபோய், அரணின் உள்ளே சென்று புகுந்து விடுபவள்.

அதற்குமேலும், புலிக்கூட்டத்தைப் போன்றவான ‘நாய்களைத் தொடரவிட்டும், முருகனைப்போன்ற கடுஞ்சீற்றத் துடனும், பகைவரைக் கடுமையாகத் தாக்கி அழிக்கும் வலிமையினையுடையவன் எம் தந்தை. அன்னோனும் வீட்டினிடத்தேயே இருக்கின்றனன். அங்ஙனமாகவும், இவள் அவ்வாறு செய்வதற்கு அஞ்சுவாள் அல்லளோ? (வீணாக அவள்மீது ஐயுற்று அவளைத் துன்பத்திற்கு உள்ளாக்காதே’ என்பது கருத்து)

என்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. உரும் உரறு முழங்குகின்ற இடி கருவிய - தொகுப்பாகத் திரண்டெழுந்த 2. தூங்கிருள் செறிந்த இருள். நடுநாள் - நள்ளிரவு. 6. மிடை - வரை. 7. அலையல் - துனபுறுத்தாதே கொள். 8 சூர் அச்சமும்ஆம்.12 சுடர் இன்று. விளக்கில்லாமல், பனிக்கும் - நடுங்கும். 14 அரணம் - அரண்வீடு; உள்வீடு.

விளக்கம்: தந்தையும் இல்லிடத்தான் என்றாள், தாயும் தந்தையும் இல்லாதபோது இரவுக்குறிக்குச் செல்லுதல் பொருந்துமேனும், இருவரும் இருக்கும்போது அவள் எங்ஙனம் போயிருக்க முடியும் என்று, அதனை மறுத்துக் கூறுகிறாள். “இரவுக்குறியிடத்தே தன்மகள் களவிலே சென்றனள்’ என்று ஐயுற்ற தாய்க்கு, அணங்கு யாதேனும் இவளுருவில் வந்திருக்கு மெனவும், கனவு கண்டிருப்பாயெனவும் கூறி, அத்துடன் நீயும் எந்தையும் வீட்டிலே இருப்ப அங்ஙனம் அவள் செல்வாளோ எனவும் கேட்டு, அந்த ஐயத்தைப் போக்குகிறாள் தோழி.

மேற்கோள்: இது மிடையேறி இழிந்தாளென்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவு மருட்டலும் உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி, அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது.இது, சிறைப்புறமாகக் கூறி வரைவுகடாதல் என்றும், தலைவி புறத்துப்போகக் கண்டு செவிலி கூறியதனைத் தோழி கொண்டு கூறினாள் என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.