பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அகநானூறு -களிற்றியானை நிரை

அங்குள்ள மீன்கள் எல்லாம், அது வயலுள் புகுந்து கலக்குதலால் கலங்கிப் பிறழ்ந்தன. அழகிய உட்டுளைவினையுடைய வள்ளைக் கொடிகள் மயங்கின. இவ்வாறு கலக்கித், தாமரையின் வண்டுதும் குளிர்ந்த மலர்களை அது நிறையத் தின்று மகிழ்ந்தது. அத்தகைய ஊர்க்கு உரியவனே!

நின்னோடு யாம் ஊடுவதற்கு நீதாம் எமக்கு என்ன உறவினையோ? நீட்சியுற்ற, மழைக்கால் வீழ்ச்சியினையும் கடந்து விளங்கும், தாழ்ந்த கரிய கூந்தலை உடையவள் ஒருத்தியை எம் மனையிற் கொணர்ந்து காட்டி, நீ வதுவை புரிந்தனை என்று, இவ்வூரவரான பிறரும் நின்னைப்பற்றி அலர் கூறினர். எம் அப்பனே! அதனையும், யாம் நின்பால் எம் வாயினாற் சொல்ல மாட்டோம். நீ வாழ்க!

பகைவரது களிறுகளைக் கொண்ட அரிய போரினைச் சிதையுமாறு கொன்றழிக்கும், ஒளிறும் வாட்படையினை உடைய வெற்றிபொருந்திய செழியனது, நெற்பொலிமிக்க அள்ளுரை யொத்த, எனது ஒள்ளிய வளையல்கள் நெகிழ்ந்து வீழ்ந்தாலும் விழ்க!பெருமானே! நீநினைத்த இடத்திற்கே சென்று வருவாயாக! நின்னைத் தடுப்பவர் யாரோ? (யாருமில்லை என்றபடி)

சொற்பொருள்: 7, புலக்கேம் - புலப்பேம். 8. உறையிறந்து மழைக்கால் வீழ்ச்சியை அடைந்து. 14. அள்ளுர் - அள்ளியூர். 15.நெகிழ்தல்-சுழலுதல்.16. சென்றீ-செல்தகைக்குநர் விலக்குவார். 'வண்டுது பனிமலர்' எனவே, வைகறையும் வந்தது என்க.

13. கொற்றச் செழியன் - கொற்கைச் செழியன் எனவும் பாடம் உண்டு; இவனே, ‘வெற்றிவேற் செழியன்’ என்பர், அப்போது. -

உள்ளுறை பொருள்: காரான் கொட்டிலைச் சேறாக்கியது போல, நீயோ நின் இல்லத்தலைவியாகிய இவளைப் பிரிவால் வேறுபடுத்தினாய். தளையை அறுத்துக் கொண்டதுபோல நின் நாணத்தையும் அறுத்துக் கொண்டாய். முள்வேலியைக் கோட்டால் நீக்கியது போலப் பரத்தைக்குக் காவலாகிய விறலியையும் பாணனாலே நீக்கினாய். மீன்கள் இரிவதுபோல அப் பரத்தையின் தோழியர் இரிவர். வள்ளைக் கொடி மயங்கியதுபோல, அவள் தாய்மார் மயங்குவர். மலர்ச்சியின்றி வண்டொடு குவிந்த தாமரையை நுகர்ந்தாற்போல, நீயே வலிந்து பெற்று அவளை நுகர்ந்தாய் என்பதாம்.

விளக்கம்: தொடியின் செறிவுக்குக் கொற்றச் செழியனால் காக்கப்பெற்ற அள்ளுரினது காவற் செறிவைக் கூறினாள்; அதுவும் நெகிழ்ந்ததென்றால், தானுற்ற துயரின் மிகுதியைக் கூறினாள்.