பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வையாபுரிப் பிள்ளையவர்கள் தம் சங்க இலக்கியப் பதிப்பைச் சென்னைச் சைவசித்தாந்த மகா சமாசத்தார் வழியாக வெளியிட்டனர். இதனால், தமிழன்பர் பெற்ற பெரும் பயனோ அளவிட்டு உரைத்தற்கும் அரிதாகும். மர்ரே கம்பெனியார் முற்றவும் செய்யுட்களைச் சீர்பிரித்து, எளிதாகக் கற்றறிவதற்குரிய ஒரு பதிப்பினையும் இதன் பின்னர் வெளியிட்டுத் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள். இவை இரண்டும் செய்யுட் பதிப்புக்கள்.

இப் பதிப்புக்கள் பலவும் தமிழறிஞருக்கு மட்டுமே பயன்படக் கண்டு, தமிழார்வம் உடையவர் அனைவருமே விருப்பமுடன் எளிதாகக் கற்று மகிழும் வகையிலேயும், இத் தெளிவுரை அமைப்பு உருவாக்கப் பெற்றிருக்கின்றது.

அகநானூற்றுச் செய்யுட்களை அகங்கனிய எடுத்துச் சொல்லியும், அதன் வளமைகளைப் பலவாக விரித்து உரைத்தும் தமிழ்வளம் பெருக்கிவரும் எண்ணற்ற தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் அன்பர்கட்கும், யான் மிகமிகப்பெரிதும் நன்றியுடையேன். பொதுவாக, அகநானூற்றுச் செய்யுட்களைக் கற்பவர்கள், தம்மை அந்தந்தச் செய்யுட்களின் தலைவன் அல்லது தலைவி அல்லது பிறர் மனநிலைகளோடு முற்றவும் ஒன்றுவித்தவர் களாக, தாமும் அவ்வுணர்வுகளிலே திளைப்பவர்களாகக் கலந்துவிடும்பொழுதுதான், இந்த இலக்கியத்தின் தமிழ்ச் செழுமையை உள்ளபடியே அறிந்துணர்ந்து பயனடைய இயலும். அங்ஙணம் கற்கும்போதுதான், பாடிய புலவர்களின் அறிவுச் செழுமையும், தமிழ்வளமும், பழந்தமிழக நலமும் விளங்கும்; தமிழ்ப்பற்றும் தமிழ் ஆர்வமும் முகிழ்த்து மலர்ந்து நாடெங்கும் மணக்கவும் தொடங்கும்.

தமிழ் உலகம், இத்தகு தமிழார்வத்தோடு இதனை விரும்பிக் கற்று மகிழும் என்று நம்புகின்றேன்.

வாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பற்று!

புலியூர்க் கேசிகன்.